
தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 89 பேர் தீக்காய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
“ஆண்டுதோறும் தீபாவளி அன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து தீக்காய சிறப்புப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்களுடனும் மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களுடனும் கலந்துரையாடி, விபத்தில் பாதிப்புக்கு உள்ளானோரைப் பார்த்து ஆறுதல் சொல்லி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து தீக்காயம் அடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளோம்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது பாதுகாப்பற்ற முறையில் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறையைப் பொறுத்தளவில், அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும், வட்டார மருத்துவமனைகளிலும் தீபாவளிக்கென்று தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதிலும் பட்டாசு வெடித்ததனால் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 89 பேர். இந்த 89 பேரில் 41 பேர் சிகிச்சை பெற்று நலமுடம் இல்லம் திரும்பியிருக்கிறார்கள். 48 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 8 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று ஓய்வெடுத்து வருகிறார்கள். மிகச்சிறிய அளவிலான அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வு பெற்று வருபவர்கள் 32 பேர். குறிப்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் 6 பேரும் பெண் ஒருவரும் தீக்காயம் ஏற்பட்டு சிறப்பு தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். உயிரிழப்புகள் ஏதும் இல்லை. அடுத்து உள்ள இரண்டு நாள்களில் மக்கள் பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பட்டாசுகளை வெடிக்கும்போது பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். பட்டு, நைலான் துணிகளை அணிய வேண்டாம். செருப்பு அணிந்துகொண்டு திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.