
கிட்னி திருட்டு முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருவதாகவும், இடைத்தரகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி திருட்டு முறைகேடு தொடர்பாக இன்று அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-
“யாரும் அரசின் கவனத்தை ஈர்க்காமலேயே முதல்வர் மு.க. ஸ்டாலின், தொலைக்காட்சிகளில் இந்த செய்திகளைப் பார்த்த உடன் எங்களை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதனடிப்படையில் சிறுநீரக முறைகேடு புகார்கள் குறித்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினித், விரிவான விசாரணை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் தலைமையில் ஒரு குழு ஆய்வு மேற்கொண்டு, கடந்த செப்டம்பர் 17 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் மற்றும் திருச்சி பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், திருச்சி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்குச் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள், மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரால் கடந்த செப்டம்பர் 23 அன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும், விசாரணையில் மேற்கூறிய மருத்துவமனைகளில் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்து, மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதும், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தியதும் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில் இவ்விரு மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்ட சிறுநீரக உறுப்பு மாற்று உரிமைச் சான்றிதழை ரத்து செய்வதற்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ள ஏற்பாளர்களுக்கும் கொடையாளிகளுக்கும் அறுவை சிகிச்சைக்கு முன் தகுந்த ஆலோசனைகள் குறித்த நிலையான இயக்க நடைமுறைகள் உருவாக்கி செயல்படுத்தப்பட வேண்டும்.
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையாகிய நான்கு இடங்களிலும் மனித உறுப்பு மாற்று அங்கீகார குழு ஹியூமன் ஆர்கன் டிரான்ஸ்பிளான்ட் ஆத்தரைசேஷன் கமிட்டி செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே செயல்பட்டு வருகிற சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் ஆராய்ச்சி அலுவலகத்தின் அங்கீகார குழுவினை மறுசீரமைப்பு செய்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அங்கீகார குழு அமைத்து மாற்றம் செய்யவும் மற்றும் சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் உள் வெளிநாடுகளிலிருந்து சிகிச்சை பெற வரும் நோயாளிகளுக்கு மட்டுமான அங்கீகார குழுவாக செயல்பட இதன் மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள அங்கீகார குழுக்களுக்கும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் அவர்கள் கண்காணிப்பு குழு தலைவராக நியமனம் செய்யப்பட வேண்டும். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் அவர்களின் தலைமையின் கீழ் வருடத்தில் இருமுறை மனித உறுப்பு மாற்று அங்கீகார குழுவின் மூலம் ஒப்பளிக்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தனிக்கை செய்யவும் மற்றும் ஆய்வு நடத்தி ஆய்வு அறிக்கை தயார் செய்து ஆண்டு அறிக்கையாக அரசிற்கு சமர்ப்பிக்க இதன் மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் உடலுறுப்பு தானம் என்ற பெயரில் உடலுறுப்பை முறைக்கேடாக விற்பது தவறான செயல் என்பது குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது.
கிட்னி திருட்டு குறித்த புகார்கள் நாமக்கல், திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்பட்டுள்ளன. இதுபோன்ற காரியங்கள் கடந்த காலங்களிலும் நடைபெற்றிருக்கிறது. ஆனால் அப்போது இருந்த அரசு எந்த புதிய விதிமுறைகளையோ சட்டப்பூர்வ நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என்பதைப் பல்வேறு உதாரணங்களின் மூலம் நான் பதிவு செய்ய முடியும்.
அரசாணை எண் 396 நாள் 8.9.2025ன் படி மாவட்ட அங்கீகார குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டு தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளிலிருந்து பெறப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் வெளிநாட்டு நபர்களின் விண்ணப்பங்களை பரிசீலித்து ஏற்பது குறித்து தீர்மானிக்க சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககம் மற்றும் ஆராய்ச்சி அலுவலகத்தில் மாநில அளவிலான ஒரு புதிய அங்கீகார குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுப்படி ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இந்த சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்ட இடைத்தரகர்களான ஸ்டான்லி மோகன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், இந்த முறைகேட்டில் தொடர்புடைய மதுரை மருத்துவமனையின் நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலக கண்காணிப்பாளர்கள் இருவர், இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர் என மொத்தம் ஏழு பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.