

ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களின் கோரிக்கை படிப்படியாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திமுக அளித்த வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செய்த மேல்முறையீட்டைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஒப்பந்த செவிலியர்கள் கடந்த டிசம்பர் 18 முதல் போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து இன்று அரசு செவிலியர்கள் சங்கம் மற்றும் ஒப்பந்த செவிலியர்கள் சங்க நிர்வாகிகளுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“புதிதாக அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் செவிலியர் கல்லூரிகள் தொடங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஏற்கனவே முதலமைச்சரின் அனுமதி பெற்று ஐந்து கல்லூரிகளில் செவிலியர் கல்லூரிகள் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியாகும். அதேபோல் சங்கங்களின் மற்றொரு கோரிக்கை, ஏற்கெனவே இருந்த ரூ. 14,000 ஊதியத்தை ரூ. 16,000 ஆக உயர்த்தியுள்ள நிலையில், சிலருக்கு உயர்த்தப்படாத சிக்கல் இருந்தது. அது தற்போது சரி செய்யப்பட்டு, அவர்களுக்கு ரூ. 4000 உயர்த்தி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களது பிரதான கோரிக்கையாக 750 புதிய பணியிடங்களை உருவாக்கி, நிரந்தரப்படுத்துவது, தொகுபூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு தொடர்பான நடவடிக்கை, புதிய செவிலியர் கல்லூரிகளை உருவாக்குவது, கொரோனா காலத்தில் பணியாற்றிய 724 செவிலியர்களை நிரந்தப் பணியில் அமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு செவிலியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களும் திருப்தி அடைந்திருக்கிறார்கள். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஒப்பந்த பணியாளர்களாக இருந்த 3683 பேருக்குப் பணி நிரந்தரம் செய்யபப்ட்டுள்ளது. கூடுதலாக இன்னும் 8,322 பணியிடங்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. அதில் இப்போதைக்கு 724 பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.” என்றார்.
Minister M. Subramanian said that the demands of contract nurses will be gradually fulfilled.