ஆடு, மாடு, குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கிறேன்; இதிலேயே பயணிக்க விருப்பம்: அண்ணாமலை

மக்கள் பணி இருக்கிறது; தேவையில்லாத வேறு வேலைகளைப் பார்ப்பதில்லை. என்னுடைய பணியை சந்தோஷமாக மேற்கொள்கிறேன்.
அண்ணாமலை - கோப்புப்படம்
அண்ணாமலை - கோப்புப்படம்ANI
1 min read

ஆடு, மாடு, விவசாயம் என நிம்மதியாக இருப்பதாகவும், இதிலேயே பயணிக்க விருப்பம் உள்ளதாகவும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அண்ணாமலை இன்று (மே 16) சாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தேசிய அளவில் உங்களுக்கு ஏதாவது பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் கூறியதாவது,

`நன்றாக இருக்கிறேன். ஆடு, மாட்டோட இருக்கேன். விவசாயம் பாக்குறேன். இதைப்போல நேரம் கிடைத்தால் கோயிலுக்கு வருவேன். ரமணாசிரமத்தில் தியானம் மேற்கொள்ள வருவேன். இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் சுற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. கட்சி சொல்லும் பணிகளை ஆங்காங்கே மேற்கொள்கிறேன்.

தலைவருக்கான கடமையாக இங்கே செல்லவேண்டும், அங்கே செல்லவேண்டும் என இல்லாமல், என் வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன். அதேநேரம் மக்கள் பணிகளையும் மேற்கொள்கிறேன். நேற்றைக்கு பார்த்திருப்பீர்கள், வெயிலில் செல்லும் மக்களுக்காக வீட்டிற்கு வெளியே மோர் வைத்தேன்; தினமும் ஒரு இரண்டாயிரம், மூவாயிரம் மக்கள் மோர் குடிக்கின்றனர்.

அதைக் கொடுப்பது பெறும் பாக்கியம். மக்கள் பணி இருக்கிறது; தேவையில்லாத வேறு வேலைகளைப் பார்ப்பதில்லை. என்னுடைய பணியை சந்தோஷமாக மேற்கொள்கிறேன். புத்தகங்கள் படிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. குழந்தைகளுடன் நிறைய நேரத்தை செலவிடுகிறேன்.

தந்தையாக, மகனாக, நீண்ட காலம் கழித்து என் தாய் தந்தையுடன் அமர்ந்து நிம்மதியாக சாப்பிட முடிகிறது. இதனால் இது எனக்கு சிறப்பாகத் தோன்றுகிறது. இதிலேயே பயணிக்கவேண்டும் என விரும்புகிறேன். ஒரு தொண்டனாக நரேந்திர மோடிக்கு (நான்) பணி செய்யவேண்டும்.

என்னுடைய ஆசை பெரிது. தமிழ்நாட்டில் மாற்றம்வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கான காலம் வரும். அதுவரைக்கும் தொண்டனாக பணி செய்துகொண்டிருக்கிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in