கோவை காந்திபுரத்தில் ரூ. 295 கோடி மதிப்பில் பிரமாண்ட நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்ட பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 206 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. மதுரையை போல கோவை மற்றும் திருச்சியிலும் பிரமாண்ட முறையில் நூலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்கு சொந்தமான இடத்தில் பிரமாண்ட நூலகத்துடன் அறிவியல் மையம் கட்டப்பட உள்ளது.
இதில் தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள் வைக்கும் இடங்கள், அறிவியல், தொழில் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய அரங்கு, மெய்நிகர் காட்சி (விர்ச்சுவல் ரியாலிட்டி) அரங்கு, 3டி கட்டமைப்புகள், வான்வெளி கட்டமைப்புகள் சார்ந்த அரங்கு, தொலைநோக்கி மூலம் வான்வெளியை பார்க்கக்கூடிய கட்டமைப்பு, ஆன்லைன் முறையில் நூல்கள் படிக்கும் வகையிலான டிஜிட்டல் நூலகம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளதாக கோவை பொதுபணித்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கட்டுமானப் பணிக்கு தகுந்த நிறுவனத்தை தேர்வு செய்ய ஆன்லைன் ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கடந்த வாரம் கோரப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் 16 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.