சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல: சென்னை உயர் நீதிமன்றம்

கோயிலில் காசு கொடுத்தால்தான் பூ கிடைக்கும் இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது. தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களாக தங்களை கருதுகின்றனர்.
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல: சென்னை உயர் நீதிமன்றம்
1 min read

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற அமர்வு.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளவந்த செவிலியரை தாக்கியது, முறைகேடுகளில் ஈடுபட்டது, கனகசபை மீது ஏறி நடராஜரை பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியது போன்ற காரணங்களுக்காக அங்கு பணியில் இருந்த தீட்சிதர் நடராஜன் என்பவரை பணி இடைநீக்கம் செய்து நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குழு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கடலூரில் உள்ள தமிழக இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளித்தார் தீட்சிதர் நடராஜன். இந்த விவகாரத்தை விசாரித்த இணை ஆணையர், தீட்சிதர் நடராஜனின் இடைநீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பொது தீட்சிதர்கள் குழுவின் முடிவுகளில் தலையிட இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும், இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் கூறி, இணை ஆணையரின் உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை இன்று (அக்.19) விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி, `நடராஜர் கோயிலில் தீட்சிதர்களால் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. சிதம்பரம் கோயிலில் மன கஷ்டங்களை போக்க வரும் பொதுமக்கள் அவமானப்படுத்தப்படுகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்துகொள்வது நல்லதல்ல.

கோயிலுக்கு வருபவர்கள் அனைவரையும் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கின்றனர். கோயிலில் காசு கொடுத்தால்தான் பூ கிடைக்கும் இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது. தீட்சிதர்கள் கடவுளுக்கு மேலானவர்களாக தங்களை கருதுகின்றனர். பக்தர்கள் வரும் வரைதான் கோயில் இப்படியே சென்றால் பக்தர்களின் வருகை குறைந்து கோயில் பாழாகிவிடும்.’ என்றார்.

இதனைத் தொடர்ந்து. சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் குழு தாக்கல் செய்த மனுவுக்கு வரும் அக்.21-க்குள் பதிலளிக்க தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார் நீதிபதி தண்டபாணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in