திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு?: அண்ணாமலை கேள்வி

திமுக ஆட்சியில், கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது தமிழ்நாடு. சுமார் ரூ. 8.5 லட்சம் கோடி வரை தமிழகத்திற்குக் கடன் உள்ளது.
திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு?: அண்ணாமலை கேள்வி
https://x.com/annamalai_k
1 min read

`தமிழக அரசின் கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணங்களை செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்குக் கடன் வாங்கும் நிலை உள்ளது என்றால் தமிழக அரசின் நேரடி வரி வருமானமும், ஜிஎஸ்டி பங்கு நிதியும் எங்கே செல்கிறது' என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இது தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று (டிச.22) காலை அண்ணாமலை பதிவிட்டவை பின்வருமாறு,

`தமிழ்நாடு முழுவதும் உள்ள 385 கல்வி மாவட்ட அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம், பல மாதங்களாகச் செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

திமுக ஆட்சியில், கடன்கார மாநிலமாக மாறியிருக்கிறது தமிழ்நாடு. சுமார் ரூ. 8.5 லட்சம் கோடி வரை தமிழகத்திற்குக் கடன் உள்ளது. வாங்கும் கடன் முழுவதும், அன்றாடச் செலவுகளுக்குப் பயன்படுகிறதே தவிர, கடன் வாங்கும் உண்மையான நோக்கத்துக்குப் பயன்படுத்தப்படுவதில்லை என்று, சி.ஏ.ஜி. தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணங்களைக் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை இருக்கிறதென்றால், உண்மையில் திமுக அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70 சதவீத நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுகிறது.

இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? திவால் ஆகும் நிலையில் இருக்கிறதா தமிழக அரசு? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in