பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா சீமான்?: திருமாவளவன் கேள்வி

சீமானின் அரசியல் இனவாதத்தை நோக்கி, ஃபாசிச கூறுகளை கொண்டதாகப் பரிணாமம் பெற்று வருகிறது. இது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

பெரியாரை வீழ்த்த சீமான் முயற்சி செய்வதால் அவர் பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா என்கிற கேள்வி எழுகிறது என கருத்து தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

சென்னை கோடம்பாக்கத்தில், தோழர் எஸ்.என் என்று அழைக்கப்படும் எஸ். நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வில் இன்று (ஜன.28) பங்கேற்றார் விசிக தலைவர் திருமாவளவன். இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் குறித்து அவர் பேசியதாவது,

`பொருத்தமில்லாத அரசியலை சீமான் பேசிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது பெரியாரை எதிர்க்கவேண்டிய தேவை என்ன வந்தது? பெரியாரை விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? பாஜக ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து இந்த உக்தியை அவர் கையாளுகிறாரா என்கிற சந்தேகம் எழுகிறது.

தந்தை பெரியார் சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். குறிப்பாக பிராமண ஆதிக்க எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். அவருடைய சமகாலத்திலேயே அவரை வீழ்த்துவதற்கு உயர் சாதிகளைச் சேர்ந்தவர்கள் அவரைக் கடுமையாக விமர்சித்தார்கள், வீழ்த்த முயற்சி செய்தார்கள். ஆனால் அது நடைபெறவில்லை.

அவர்கள் தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே வேலையை இவர் செய்கிறார் என்றால் இவர் பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா என்கிற கேள்வி எழுகிறது. அவரது அரசியல் அதிர்ச்சியளிக்கிறது. அவர் யாருக்கு துணை போகிறார், தமிழ் தேசியம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான அரசியலை ஏன் செய்கிறார் என்கிற கேள்விகள் எழுகின்றன.

ஒரு வகையில் கவன ஈர்ப்புக்காக அவர் இவ்வாறு நடந்துகொள்வதாக தோன்றுகிறது. கருத்தியல் அடிப்படையில் எந்த ஒரு விவாதத்தையும் அவர் வலுவாக முன்வைக்கவில்லை. தனி நபர் தாக்குதல்கள், கட்சி ரீதியிலான கடுமையான விமர்சனங்கள் என்ற வகையில், அவரது அரசியல் இனவாதத்தை நோக்கி, ஃபாசிச கூறுகளை கொண்டதாகப் பரிணாமம் பெற்று வருகிறது. அது அவருடைய எதிர்காலத்திற்கு நல்லதல்ல’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in