திமுகவின் ஊழல்களில் அதன் கூட்டணிக் கட்சிகளும்...: அண்ணாமலை

விசிகவை நடத்துவது திருமாவளவனா அல்லது துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவா? கடந்த 15 நாட்களாக விசிக திருமாவளவனின் கட்டுப்பாட்டில் இல்லை.
திமுகவின் ஊழல்களில் அதன் கூட்டணிக் கட்சிகளும்...: அண்ணாமலை
1 min read

திமுக ஊழல்கள் குறித்து மூன்றாம் கட்டமாக அடுத்து வெளியிடப்படவுள்ள ஆவணங்களில் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருக்கும் என பேசியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

திருச்சி விமான நிலையத்தில் இன்று (டிச.10) செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசியவை பின்வருமாறு,

`விசிகவை நடத்துவது திருமாவளவனா அல்லது துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவா என நேற்றைக்கு முந்தைய நாள் நான் கேட்டேன். இதனால் அண்ணன் திருமாவளவனுக்குக் கோபம் வந்துவிட்டது. கடந்த 15 நாட்களாக விசிக அவரது கட்டுப்பாட்டில் இல்லை.

புத்தக வெளியீட்டு விழாவிற்குப் போகாதது அவரது விருப்பம். விழாவுக்கு அவர் செல்லவில்லையென்றாலும், அவரது துணை பொதுச்செயலாளர் சென்று அவ்வாறு பேசியிருப்பது குறித்து நான் கேள்வி எழுப்பினேன். நான்தான் அவரை அனுப்பினேன் என அதற்கு பதிலளித்தார். அந்த விழாவில் முதல்வருக்கு எதிரான கருத்தை அவர் பேசியிருக்கிறாரே, அப்படியென்றால் கட்சி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதா அல்லது அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறதா என கேள்வி எழுப்பினேன்.

அதற்கு அந்தக் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டிருக்கிறார். இன்றைக்கு இந்தியாவிலும், உலகிலும் மிகப்பெரிய கட்சியாக இருக்கும் பாஜகவையும், விசிகவையும் திருமாவளவன் ஒப்பிடும் அளவுக்கு எங்கள் கட்சி தாழ்ந்துபோய்விடவில்லை.

திமுக ஊழல்கள் குறித்து ஏற்கனவே இரண்டு ஆவணங்கள் வெளியிடப்பட்டன. திமுக ஊழல்கள் குறித்து மூன்றாம் கட்டமாக அடுத்து வெளியிடப்படவுள்ள ஆவணங்களில் அதன் கூட்டணிக் கட்சிகள் குறித்த தகவல்களும் இடம்பெற்றிருக்கும். இன்றைக்கு தமிழ்நாட்டில் வெளியிடப்படும் பல அரசு ஒப்பந்தங்களை கூட்டணி கட்சியினரும் எடுத்துக்கொள்கின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கடந்த மூன்றாண்டுகளில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள், அதை யாரெல்லாம் எடுத்தார்கள் என்கிற தகவல்கள் ஆராயப்பட்டு வருகின்றன. அவற்றை 2025-ன் தொடக்கத்தில் மக்கள் மன்றத்தில் வைப்போம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in