உயர் படிப்புக்காக லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஆகஸ்ட் 27) செல்ல இருப்பதை ஒட்டி, சென்னையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் பேசியவை பின்வருமாறு:
`அண்ணன் எடப்பாடி பழனிசாமி மீது நான் வைத்த விமர்சனம் நூறு சதவீதம் சரியானது. அதைத் திரும்பப்பெற மாட்டேன். தினமும் ஒரு முன்னாள் அமைச்சர் என்னைத் திட்டுகிறார், படிக்கச் சென்றால் கொச்சைபடுத்துகிறார்கள், ஆட்டை வெட்டுகிறார்கள். இது எல்லாமே நடக்கும்போது, கைகட்டி உட்காருவதற்காக நான் வரவில்லை.
உட்கட்சியாக இருந்தாலும் சரி, வெளிக்கட்சியாக இருந்தாலும் சரி, என்னுடைய பாணி மாறாது. நான் அரசியல் மாற்றத்துக்காக வந்திருக்கிறேன். நான் தலைவரான பிறகு கட்சி வளர்ந்திருக்கிறது. மூத்த தலைவர்களுக்கு மதிப்பளிக்கிறேன். அவர்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அரசியலில் நமக்கென்று தனி பாணி இருக்க வேண்டும்.
கையைக் காலைப் பிடித்து வந்தார் அண்ணாமலை என்று பழனிசாமி கூறியபோது, இப்போது பேசக்கூடிய அந்தத் தலைவர்கள் அப்போது எங்கே சென்றார்கள்?. என் உள்ளத்தில் இருப்பதை நான் பேசவில்லை என்றால் பிறகு எதற்கு நான் அரசியலில் இருக்கவேண்டும்?. அது தவறா சரியா என்பது எனக்குத் தெரியாது. அதைக் காலம்தான் கூற வேண்டும்.
என் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்கிறார்கள், ஆபாசமாக பேசுகிறார்கள். திரும்ப அதே பாணியில் நான் பேசினால் எதற்குக் கோபம் வர வேண்டும்? 39 வயது அண்ணாமலை பேசியதை விடுங்கள். அவ்வளவு அரசியல் அனுபவம் இருந்தால் 70 வயதான அண்ணன் எடப்பாடி பழனிசாமி பேசியது சரியா?
நான் என்ன கையைக் காலைப் பிடித்தா அரசியல் செய்கிறேன்? தேசியக் கட்சியில் இருந்தாலும் தமிழகத்தை முன்னிலைப்படுத்தியே அரசியல் செய்து வருகிறேன்’, என்றார்.