பெரியார் சொன்னதாக சீமான் கூறியதற்கு ஆதரவாக தான் ஆதாரம் தருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது தந்தை பெரியார் குறித்து பல்வேறு விமர்சனங்களைக் காட்டமாக வைத்தார். பெரியார் சொன்னதாகப் பேசியதற்கு ஆதாரம் கோரி பெரியார் ஆதரவாளர்கள் சீமானுக்குக் கண்டனம் தெரிவித்தார்கள்.
தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று காலை சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றார்கள். காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். மேலும், புதுச்சேரி சென்றுள்ள சீமானைச் சந்தித்த தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் முற்பட்டனர். அங்கும் காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தினார்கள். இதுதொடர்பாக சீமான் மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சீமானுக்கு ஆதரவாக தான் ஆதாரங்களைத் தருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:
"சென்னை புத்தகக் காட்சியில் நூல் வெளியீட்டு விழாவில் சீமான் சில கருத்துகளைப் பேசியிருக்கிறார். இதன்பிறகு, பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் சில கருத்துகளைப் பேசியிருக்கிறார். பெரியார் எங்கே சொன்னார், எந்தப் புத்தகத்தில் சொன்னார் என்பதற்கான ஆதாரங்களை நான் கொடுக்கிறேன். சீமான் அண்ணாவுக்கு ஆதரவாக நான் ஆதாரம் கொடுக்கிறேன்.
அதைப் பொதுவெளியில் பேச வேண்டிய அவசியமில்லை என்பது என்னுடையக் கருத்து. காரணம், பெரியார் பேசிய நிறைய புத்தகங்களை அழித்துள்ளார்கள். அந்தளவுக்குப் பெரியார் பேசியிருக்கிறார்.
பெரியார் பேசியிருப்பதாக சீமான் சொன்னதை, எந்தப் புத்தகத்தில் பெரியார் எழுதியிருக்கிறார் என்பதற்கான ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். காவல் துறையினர் யாரேனும் சீமான் வீட்டுக்கு வந்தால், அந்தப் புத்தகத்தையும் அதன் நகலையும் கொடுத்தால் போதும். ஆனால், பொதுவெளியில் அதைப் பேச நான் விரும்பவில்லை.
காரணம் பெண்கள் பார்க்கிறார்கள், குழந்தைகள் பார்க்கிறார்கள். பெரியார் ஒரு காலத்தில் பேசியதை எல்லாம் நாம் பேச ஆரம்பித்தால், மக்களுக்கு அருவருப்பு வந்துவிடும். அதைப் போன்று சில வார்த்தைகள் அதில் உள்ளது.
ஆனால், சீமான் சொன்னது சரி தான் என்று சொல்ல நான் விரும்பவில்லை. ஒரு கருத்தை வைத்துள்ளார்கள். சீமான் ஏன் சொன்னார் என்பதை அவர்தான் கூற வேண்டும். என்னைப் பொறுத்தவரை பெரியார் பேசியிருக்கிறாரா என்று கேட்டால், அவர் பேசியிருக்கிறார் அதற்கான காரணத்தைத் தர நான் தயார்.
காலம் கடந்துவிட்டது, அரசியல் மாறிவிட்டது. மக்கள் புதிய பார்வையில் அரசியலைப் பார்க்கிறார்கள். பெரியார் இதற்கு முன்பு பேசியதை எல்லாம் எடுத்து பொதுவெளியில் பேசினால் தவறாகிவிடும்" என்றார் அண்ணாமலை.