
அரசியலில் கால்பதித்துள்ள விஜயை வரவேற்கிறேன் எனப் பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பை முடித்துவிட்டு மூன்று மாதத்திற்குப் பிறகு தமிழகத்திற்குத் திரும்பியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசியவை பின்வருமாறு,
`மூன்று மாத காலத்தில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தன்னுடைய உச்சத்தில் இருக்கக்கூடிய இடத்தில் இருந்து அரசியலில் கால்பதித்திருக்கிறார் நடிகர் விஜய். அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன் விஜயை வரவேற்கிறேன். மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற நோக்கில் அவர் வந்திருக்கிறார்.
அதேநேரம் நிறைய விஷயங்களை அவர் பேசியிருக்கிறார். வரும் காலத்தில் அது குறித்து தேவைப்படும்போது பேசுவோம். முதல் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்களுக்கு பாஜக தலைவர்கள் பதில் கூறியிருக்கின்றனர். அவர் முழு நேர அரசியலுக்கு வந்து கருத்துகளை முன்வைக்கும்போது, நாங்களும் எங்கள் கருத்துகளை முன்வைப்போம். இது மக்களுக்கான மற்றுமொரு தேர்வு.
வேகமான வளர்ச்சி பெற்று தமிழகத்தின் துணை முதல்வர் ஆகியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். திமுக எப்போதுமே ஒரு குடும்பத்தை சார்ந்து இருக்கிறது என்ற குற்றச்சாட்டு நிரூபணமாகியிருக்கிறது. விமர்சிக்க வேண்டிய இடத்தில் உதயநிதி ஸ்டாலினை விமர்சிப்போம், நன்றாக செயல்பட்டால் நிச்சயமாக பாராட்டுவோம்.
புதிதாக எதையும் விஜய் பேசவில்லை. திராவிடக் கட்சிகள் பேசும் அதே சித்தாந்தத்தைதான் அவரும் பேசுகிறார். விஜயின் கொள்கை திராவிட கட்சிகளின் கொள்கையுடன் ஒத்துப்போகிறது. அவரது வருகை யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பொதுமக்களுக்கே தெரியும். புதிய நபர்களைப் பார்த்து நாங்கள் எப்போதும் பயப்படப்போவதில்லை.
அரசியல் களம் என்பது வேறு. தினமும் களத்தில் நிற்கவேண்டும். அக்.28-க்குப் பிறகு எத்தனை முறை விஜய் வெளியே வந்திருக்கிறார்? அரசியலில் வெற்றி தோல்வி மாறி மாறி வந்துகொண்டிருக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிடக் கட்சிகள் மூன்றாகப் பிரிந்திருக்கின்றன. விஜயைக் கேள்வி கேட்கும் இடத்தில் நாங்கள் கேள்வி கேட்போம்.
ஒரு நிரபராதியைக் கொண்டாடுவதுபோல முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியைக் கொண்டாடுகிறார். இது புதிது கிடையாது. ஊழல் மலிந்திருக்கும் திமுக, ஜாமினில் வெளிவந்திருக்கும் ஒரு மனிதரை காந்தியைப் போல கொண்டாடுவது தமிழகத்திற்குப் புதிது கிடையாது. அனைத்தையும் தமிழக மக்கள் பார்க்கின்றனர். அவர்கள் பதிலடி கொடுப்பார்கள்’ என்றார்.