
`அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ள சார் குறித்து நேர்மையான விசாரணை தேவை’ என்று கூறியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
சென்னை விமானநிலையத்தில் இன்று (ஜன.2) காலை செய்தியாளர்களைச் சந்தித்து, திருமாவளவன் பேசியவை பின்வருமாறு,
`தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அவ்வப்போது நடந்துள்ள சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்று விசிக அவ்வப்போது தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட, அந்தக் குற்றச்செயல் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் உருவாக்கியுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரையில் கைது செய்யப்பட்ட நபரையும் தாண்டி ஒரு சிலர் அதில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுவாக உள்ளது. எனவே (தமிழக) அரசு, குறிப்பாக காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கைது செய்யப்பட்ட நபருக்கு உடனடியாகப் பிணை வழங்கக்கூடாது. அவரை சிறையில் வைத்திருந்தபடியே புலன் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு விசாரணையையும் முடித்துத் தண்டனை வழங்கவேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது.
இதில் ஒரு சார் சம்மந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் இருப்பதால், நேர்மையான புலன் விசாரணை தேவை, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்படவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்’ என்றார்.