
சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் பக்தர்கள் தரிசனத்துக்காக தீட்சிதர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்திபெற்ற நடராஜர் கோயிலில் இருக்கும் கனகசபை மீது நின்று, நடராஜரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் தொடர்பான வழக்கு மீதான விசாரணையை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சௌந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு மேற்கொண்டு வருகிறது.
கடந்த முறை விசாரணை நடைபெற்றபோது, கனகசபை மீதேறி பக்தர்கள் நடராஜரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் நேரம், அதற்காக பின்பற்றப்படும் நடைமுறைகள் போன்றவை குறித்த தகவல்களைத் தாக்கல் செய்யும்படி பொது தீட்சிதர்கள் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 31) மீண்டும் நடைபெற்றது.
அப்போது, கனகசபையின் மேற்கு பகுதியில் இருந்து பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்கலாம் என்று முடிவெடுத்து கடந்த மார்ச் முதல் அது அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கனகசபை மீதேறி சுவாமி தரிசனம் செய்வதாகவும் பொது தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, `தீட்சிதர்கள் தரப்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய முடியாது’ என தமிழக இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், கனகசபையின் மேற்கு பகுதி வழியாகச் சென்று பக்தர்கள் தரிசனம் செய்து திரும்புவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமிக்கும்படி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.
குறிப்பாக, வார நாள், வார விடுமுறை நாள், விழா நாள் என மூன்று நாள்கள் இந்த குழுவினர் நேரில் ஆய்வுசெய்து, தீட்சிதர்களின் தற்போதைய திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா அல்லது பக்தர்கள் இடையூறுகளை சந்திக்கிறார்களா என்பதை புகைப்பட ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மீதான விசாரணை ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.