நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்றுவதில் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும்: திருமாவளவன்

மத நல்லிணக்க பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மதுரை மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்றுவதில் தமிழக அரசு கவனம் செலுத்தவேண்டும்: திருமாவளவன்
1 min read

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை பின்பற்றுவதில் அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றும், சமூகநீதியைப் பின்பற்றுவதற்கு உரிய வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.

உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைபிடிக்கக் கோரி சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே இன்று (மார்ச் 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருமாவளவன் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

`சமூகநீதியை பின்பற்றவேண்டும், வெளிப்படையாக நியமனங்கள் நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை வழக்கறிஞர்கள் சார்பில் இன்று (மார்ச் 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கோரிக்கையை விசிக சார்பில் ஆதரிக்கிறோம்.

உயர் நீதிமன்றத்தில் தற்போது 12 நீதிபதிகள் புதிதாக நியமிக்கப்படவுள்ள சூழலில், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள், குறிப்பாக தென்மாவட்டங்களைச் சேர்ந்த பிரமலை கள்ளர், மறவர், புதை வண்ணார், ஆதிதிராவிடர் போன்ற சமூகத்தை சார்ந்தவர்கள் இதுவரையில் நீதிபதியாக இல்லை என்ற குறை இருக்கிறது.

ஏற்கெனவே இது தொடர்பாக பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உரிய நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்திய மற்றும் தமிழ்நாடு சட்ட அமைச்சர்களை சந்தித்து வழக்கறிஞர்கள் முறையிட்டுள்ளார்கள். எனவே இதில் அரசும் கவனம் செலுத்தவேண்டும்.

சமூகநீதியைப் பின்பற்றுவதற்கு உரிய வழிகாட்டுதலை தமிழக அரசும், சட்டத்துறை வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். மத நல்லிணக்கப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து முயற்சி எடுத்துள்ளார்கள். மார்ச் 9-ல் நடக்கும் இந்தப் பேரணிக்கு மதுரை மாநகராட்சி, மாநகர காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இது சமூக நல்லிணக்கத்திற்கான பேரணி. யாருடைய மத உணர்வுகளையும் தூண்டுவதற்காகவும், சீண்டுவதற்காகவும் நடத்தப்படும் பேரணி அல்ல. எந்த மதங்களுக்கும் எதிரானது அல்ல. யாருக்கும் எதிரானதும் இல்லை. எனவே மதுரை மாநகர காவல் ஆணையர் இதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in