காவல் துறையினருடன் வாக்குவாதம்: அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

சூலூர் மற்றும் ஒண்டிப்புதூர் காவல் நிலையங்களில் அண்ணாமலை மீது மொத்தம் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை ஒண்டிப்புதூருக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்து வந்தார். அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் அவரைத் தடுக்க முயற்சித்தார்கள்.

ஆனால், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டதாகவும், காரில் செல்லும் வழியில் வணங்குவது பிரசாரத்தில் வராது என்ற வகையில் காவல் துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினரின் செயல்பாடுகளுக்கு எதிராக அவர் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினார்.

இதுதொடர்பாக, தேர்தல் அலுவலர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சூலூர் மற்றும் ஒண்டிப்புதூர் காவல் நிலையங்களில் அண்ணாமலை மீது மொத்தம் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதாவது:

"இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கிடையாது என்ற கோணத்தில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். நாங்கள் பிரசாரம் மேற்கொள்ளவில்லை, எங்களுடைய பிரசார வாகன விளக்கு அணைக்கப்பட்டுவிட்டது என்று நாங்கள் விளக்கமளித்தோம். நாங்கள் பாஜகவைச் சேர்ந்த 2,000 தொண்டர்களைச் சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தோம். ஏற்கெனவே அனுமதி பெறப்பட்ட இடத்தில் சந்திக்கச் சென்றோம்.

இருந்தபோதிலும், எங்களை மாற்றுப் பாதையில் செல்லுமாறு காவல் துறை அறிவுறுத்தப்பட்டது. காவல் அதிகாரியின் செயல்பாடு, தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை மீறும் வகையில் இருந்தன. மூன்று ஆண்டுகால மோசமான ஆட்சியை ஏற்க மறுத்து ஏப்ரல் 19-ல் வாக்களிக்கும்போது கோவை மக்களின் கடும் கோபத்துக்குக் கொடுங்கோல் திமுக அரசு ஆளாகும்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in