தேர்தல் நிலைப்பாடு வேறு, மக்கள் பிரச்னைக்காக களமாடும் நிலைப்பாடு வேறு: திருமாவளவன்

காவிரி நீர், ஈழத் தமிழர் பிரச்னைகளில் எல்லோரும் சேர்ந்துக் குரல் கொடுக்கவேண்டும் என்பது போல, மது மற்றும் போதை ஒழிப்பில் அனைவரும் சேர்ந்துக் குரல் எழுப்பவேண்டும்
தேர்தல் நிலைப்பாடு வேறு, மக்கள் பிரச்னைக்காக களமாடும் நிலைப்பாடு வேறு: திருமாவளவன்
ANI
1 min read

`மக்கள் பிரச்னைகளுக்காக கூட்டணிக்கு எதிரணியில் இருப்பவர்களுடன் முன்பு கைகோர்த்துப் பணியாற்றியிருக்கிறோம். தேர்தல் நிலைப்பாடு வேறு, மக்கள் பிரச்னைகளுக்காக களமாடும் நிலைப்பாடு வேறு’ என்று விசிக தலைவர் திருமாவளவன் திருச்சி விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியவை பின்வருமாறு:

`மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு இவர் ஏன் அதிமுகவுக்கு அழைப்புவிடுத்தார் என்று ஒட்டுமொத்தமாக இந்தப் பிரச்னையை திசை திருப்புவது, மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும், அவர்களின் உணர்வுகளையும் அவமதிப்பதாக இருக்கிறது. எல்லோரும் சேர்ந்து நாம் ஒருமித்துக்குரல் எழுப்பினால், ஆட்சியில் இருக்கிற திமுகவும் அதே கருத்தில் இருப்பதால் மதுபானக் கடைகளை மூடுவதில் எந்தச் சிக்கலும் இருக்கப்போவதில்லை.

மீண்டும் நான் கூறுகிறேன் காவிரி நீர், ஈழத் தமிழர் பிரச்னைகளில் எல்லோரும் சேர்ந்துக் குரல் கொடுக்கவேண்டும் என்பது போல, மது மற்றும் போதை ஒழிப்பில் அனைவரும் சேர்ந்துக் குரல் எழுப்பவேண்டும். மது விலக்கு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பில் ஒரு தேசியக்கொள்கை வரையறுக்கப்பட வேண்டும் என்பதால் திமுகவும் இதில் சேர்ந்து அழுத்தம் கொடுத்தால் மட்டுமே இது நிகழும்.

இதை ஏன் விசிக மாநாடாகப் பார்க்க வேண்டும்? விசிக இதை முன்னெடுக்கிறோம். அனைவரும் சேர்ந்து குரல் கொடுப்போம் அவ்வளவுதான். வெறும் அரசியல் கணக்குகளைப் போட்டுப் பார்ப்பது இந்தப் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது. மீண்டும் கூறுகிறேன், போதை இல்லாத ஒரு தேசத்தை உருவாக்க முயற்சி செய்வோம்.

பாமக தலைவர் மது ஒழிப்பில் நாங்கள் எல்.கே.ஜி. படிக்கிறோம் என்று கூறினாலும் சரி, எங்களுக்கும் சமூக உணர்வு இருக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொண்டால் போதும். மக்கள் பிரச்னைகளுக்காக நாங்கள் கூட்டணிக்கு எதிரணியில் இருப்பவர்களுடன் கைகோர்த்துப் பணியாற்றியிருக்கிறோம். அதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. தேர்தல் நிலைப்பாடு வேறு, மக்கள் பிரச்னைகளுக்காக களமாடும் நிலைப்பாடு வேறு’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in