மருத்துவத் துறை அமைச்சர் மருந்தை மாற்றி கூறுகிறார்: இபிஎஸ் குற்றச்சாட்டு

"கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதிக்க சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்றும் அனுமதி மறுத்துவிட்டார்."
மருத்துவத் துறை அமைச்சர் மருந்தை மாற்றி கூறுகிறார்: இபிஎஸ் குற்றச்சாட்டு
படம்: https://x.com/ANI/status
2 min read

மருத்துவமனைகளில் விஷமுறிவுக்குப் போடக்கூடிய ஃபோமிபிசோல் இல்லை என்று நான் குற்றம்சாட்டினால், அல்சருக்கு தரக்கூடிய ஓமிபிரசோல் நிறைய இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தவறான கருத்தைப் பதிவு செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் புறக்கணித்துள்ளார்கள். சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மரணமடைந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், மக்களுடையப் பிரச்னையை சட்டப்பேரவையில் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் பேசுவதற்கு அனுமதி கேட்டோம். சட்டப்பேரவைத் தலைவர், அனுமதியை மறுத்துவிட்டார். பலமுறை குரல் கொடுத்தோம். ஆனால், இன்றும் சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார்.

எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி 183 பேர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. 183 பேர் சிகிச்சையில் இருந்ததாகவும், இதில் இதுவரை 55 பேர் உயிரிழந்ததாகவும் எங்களுக்குச் செய்திகள் கிடைத்துள்ளன.

நாள்தோறும் உயிரிழப்புகள் அரங்கேறுகின்றன. இந்த அரசு மெத்தனப் போக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. துரிதமாக செயல்பட்டிருந்தால், பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.

நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.

கள்ளச்சாராயம் அருந்தி விஷ முறிவுக்காகப் போடக்கூடிய ஃபோமிபிசோல் ஊசி மருத்துவமனைகளில் போதிய அளவு இல்லை என்று நான் கூறினேன். ஆனால், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வேண்டுமென்றே திட்டமிட்டு ஓமிபிரசோல் மாத்திரை போதிய அளவுக்கு உள்ளதாகக் காண்பிக்கிறார். ஓமிபிரசோல் என்பது அல்சருக்குத் தரக்கூடிய மாத்திரை. விஷமுறிவுக்காகப் போடக்கூடிய மருந்து அவர்களுக்கு எங்கும் கிடைக்கவில்லை. ஃபோமிபிசோல் ஊசி மருத்துவமனையில் இல்லை. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தவறான கருத்துகளைப் பதிவு செய்கிறார்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்தவர்கள் காலதாமதாக வந்ததால் உயிரிழப்பு அதிகரித்துவிட்டதாகக் கூறினார். காலதாமதமாக வந்ததற்கு யார் காரணம்? அரசு தான் காரணம்.

3 பேர் மரணமடைந்தவுடன் ஒருவர் வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கால் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாகவும், மூன்றாவது நபர் வலிப்பு வந்து உயிரிழந்ததாகவும் முந்தைய மாவட்ட ஆட்சியர் பேட்டியளிக்கிறார்.

கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்துள்ளார்கள் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். கள்ளச்சாராயம் குடித்தால்கூட பாதிப்பில்லை என்று நினைத்துதான் மக்கள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெறவில்லை. மாவட்ட ஆட்சியர் உண்மையைக் கூறியிருந்தால், பலர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றிருப்பார்கள். பலரது உயிரை நாம் காப்பாற்றியிருக்கலாம்.

அங்குள்ள திமுக மாவட்டச் செயலாளர், எம்எல்ஏ இதில் முக்கியப் பங்கு வகிப்பதாக மக்களும் என்னிடம் கூறுகிறார்கள், ஊடகங்களும் தெரிவிக்கின்றன. அவர்களை விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும். இந்த அரசில் அங்கம் வகிக்கக்கூடிய காவல் துறையினர் விசாரித்தால் இதில் உண்மை வெளியில் வராது. எனவே, இந்த வழக்குக்கு சிபிஐ விசாரணை தேவை" என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in