தமிழக பாஜகவின் சென்னை பெருங்கோட்டம் நிர்வாகிகள் சார்பில் `தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற பெயரில் சென்னையில் நேற்று (ஆகஸ்ட் 25) பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியவை பின்வருமாறு:
`இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கிற அதிமுக தன்னுடைய தன்மையை இழந்து பிட்டிங் ஏஜெண்ட் கட்சியாக மாறிவிட்டது. காலையில் எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி யாரையோ பிடித்து பதவிக்கு வந்தார் அண்ணாமலை, அவர் மைக்கைப் பார்த்தால் பொய் பேசுவார் என்று பேசியிருந்தார்.
நேர்மையை, நாணயம் ஆகியவை குறித்து நீங்கள் எனக்குப் பாடம் எடுக்க வேண்டாம். கூவத்தூரில் டெண்டர் முறையில் தமிழகத்தின் முதல்வரைத் தேர்ந்தெடுத்தீர்கள். காலில் விழுந்து பதவியைப் பிடித்தார் எடப்பாடி பழனிசாமி. இந்தத் தன்மானம் மிக்க ஒரு விவசாயியின் மகனை, பச்சை மையில் 10 ஆண்டுகாலம் கையெழுத்துப்போட்டு ஒரு பைசா வாங்காத இந்த அண்ணாமலை பற்றி சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் கிடையாது.
2026-ல் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு நான்காவது இடம்கூட கிடைக்காது. 2019-ல் வாரணாசியில் மோடி வேட்புமனுத்தாக்கல் செய்யச் சென்றபோது எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் தோற்கப்போகிற மோடிக்காக நான் எதற்கு வர வேண்டும் என்று அவர் பேசினார். என் தலைவனைப் பற்றி பேசிய பழனிசாமியை கூட்டணிக் கட்சித்தலைவராக நான் ஏற்றுக்கொண்டது கிடையாது’.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், மாநில துணைத் தலைவர்கள் கரு. நாகராஜன், வி.பி. துரைசாமி, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.