கோவையில் அண்ணாமலை தோல்வி!

அதிமுக வேட்பாளர் 2,36,490 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் 82,657 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்கள்.
கோவையில் அண்ணாமலை தோல்வி!

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்து தோல்வியடைந்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தேசிய அளவில் பாஜக ஆட்சியமைப்பதற்குத் தேவையான 272 இடங்களைப் பெறவில்லை. எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏறத்தாழ 290 இடங்களில் வெற்றி பெறுகிறது.

தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தெற்கில் பாஜக வெற்றி பெறாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் தனித்தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதிமுக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்படும், களம் திமுக v பாஜக என்று மாறும் என பல்வேறு கருத்துகள் தேர்தலுக்கு முன்பு வைக்கப்பட்டன. பாஜகவின் கை ஓங்கியிருப்பதாகப் பேசப்பட்டு வந்தாலும், இதற்கு வலு சேர்க்கும் வகையில் கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என்று பாஜக அறிவிக்கப்பட்டது.

இதனால், தேசிய அளவில் கவனம் ஈர்த்த தொகுதியாக கோவை நாடாளுமன்றத் தொகுதி இருந்தது. தேசிய ஊடகங்கள் கோவையில் முகாமிட்டன. அண்ணாமலையைப் பேட்டி கண்டன. திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ஜி ராமச்சந்திரன், நாம் தமிழர் சார்பில் கலாமணி ஜெகந்நாதன் ஆகியோர் போட்டியிட்டார்கள்.

கோவையில் கடுமையாக பிரசாரம் செய்த அண்ணாமலை, டெபாசிட்டை இழக்கும் முதல் தொகுதியாக கோவை இருக்கும் என்றெல்லாம் பேசினார்.

ஏப்ரல் 19-ல் நடைபெற்ற தேர்தலில் கோவையில் தகுதி பெற்றிருந்த 21.06 வாக்காளர்களில் 13.66 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தார்கள். மக்கள் தங்களுடைய ஆதரவைத் திமுகவுக்கே அளித்துள்ளார்கள். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகளைப் பெற்று 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அண்ணாமலை 4,50,132 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் கலாமணி ஜெகந்நாதன் 82,657 வாக்குகளைப் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்துள்ளார்கள்.

கோவையில் பெற்ற வெற்றியை திமுகவினர் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

தோல்வி குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

"கோவை பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட எனக்கு, 4.50 லட்ச வாக்குகள் அளித்து, அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்திருக்கும் கோவை பாராளுமன்றத் தொகுதி பொதுமக்கள் அனைவருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவையின் புதிய பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் ராஜ்குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மாற்று கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கோவை தொகுதி வளர்ச்சிக்கு, அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி பொதுமக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று உறுதி அளிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in