காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்: இறுதியானது திமுக கூட்டணி!

கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இறுதியானதையடுத்து, திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
காங்கிரஸுக்கு 10 தொகுதிகள்: இறுதியானது திமுக கூட்டணி!
படம்: https://twitter.com/INCTamilNadu

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுச்சேரி தொகுதி என மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே நீண்ட நாள்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழு தில்லியிலிருந்து இன்று சென்னை வந்தது. காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் உள்ளிட்டோர் மாலை அண்ணா அறிவாலயம் சென்றார்கள்.

பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகள், புதுச்சேரி மக்களவைத் தொகுதி என மொத்தம் 10 மக்களவைத் தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வதாக முடிவு செய்யப்பட்டது.

கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் திமுத தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டுள்ளார்கள்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது:

"திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. 40 தொகுதிகளிலும் நாங்கள் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்" என்றார் செல்வப்பெருந்தகை.

கே.சி. வேணுகோபால் கூறியதாவது:

"தமிழ்நாட்டில் 9 இடங்களிலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. மீதமுள்ள தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களை ஆதரிக்கும். இந்த முறை அனைத்து 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்" என்றார் கே.சி. வேணுகோபால்.

கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு இறுதியானதையடுத்து, திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

திமுக கூட்டணி:

  • திமுக - 21 தொகுதிகள்

  • காங்கிரஸ் - 10 தொகுதிகள் (புதுச்சேரி உள்பட)

  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகள்

  • இந்திய கம்யூனிஸ்ட் - 2 தொகுதிகள்

  • விடுதலைச் சிறுத்தைகள் - 2 தொகுதிகள் (சிதம்பரம், விழுப்புரம்)

  • மதிமுக - 1 தொகுதி

  • இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1 தொகுதி (ராமநாதபுரம்)

  • கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1 தொகுதி (நாமக்கல்)

இதுதவிர, இந்தக் கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இடம்பெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவளிக்கும் வகையிலும், 2025 மாநிலங்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ஓர் இடம் ஒதுக்கும் வகையிலும் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

படம்:https://twitter.com/arivalayam

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in