

முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. தனது கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதிப் பங்கீடு குறித்த கோரிக்கைகளைக் கேட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸுடனும் பல கட்டமாகத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனாலும் இன்னும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. இது குறித்து பிப்ரவரி 1 அன்று இந்தியா டுடேவின் நேர்காணலில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஒத்து வராது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார். மேலும் திமுகவிடம் காங்கிரஸ் 41 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கொடுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. இதனால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது.
காங்கிரஸுக்கு 25 தொகுதிகள்?
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. இதில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் திமுக பங்கு தர வேண்டும் என்ற குரல் காங்கிரஸ் கட்சிக்குள் வலுத்து வருகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இதையடுத்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருந்த கிரிஷ் சோடங்கர், “திமுக 25 தொகுதிகளை கொடுப்பதாக தெரிவித்தது. ஆனால், அது ஏற்கத்தக்கது அல்ல” என்று கூறியிருந்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.
முதலமைச்சருடன் திடீர் சந்திப்பு
தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள கிரிஷ் சோடங்கர் தில்லி சென்றுள்ள நிலையில், இன்று காலை முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு
அதன்பின் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. முடிவடைந்ததும் உங்களிடம் தெரிவிப்போம். திமுக தரப்பில் எங்களுக்கு எந்தக் கெடுவும் விதிக்கப்படவில்லை. நான் முதலமைச்சரைச் சந்தித்தது மரியாதை நிமித்தமானது” என்றார்.
டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து
அதன்பின்னர் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“பேச்சுவார்த்தை தொடர்கிறது. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். அவர்கள் கேட்பது வேறு, நாங்கள் சொல்வது வேறு. ஆனால் அதைச் சுமூகமாக முடிப்பதைத்தான் ஸ்டாலின் விரும்புவார். இப்போது திமுகவிடன் பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் வந்திருக்கிறது என்றாலே, பழைய நிலைப்பாட்டிலிருந்து தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். காங்கிரஸ் இல்லையென்றால் திமுக 25 இடங்களில் கூட வெற்றி பெறாது என்று அரசியலே தெரியாமல் தவெகவினர் பேசி வருகிறார்கள். அவர்கள் முதலமைச்சர் ஆக வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். மக்களுக்காக வரவில்லை” என்றார்.
We met the Chief Minister as a courtesy. Talks are underway regarding seat sharing, said Tamil Nadu Congress Committee President Selvaperunthagai.