கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 7 தனிப்படைகள் அமைப்பு | Coimbatore Gang Rape | College Student |

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் திமுக அரசை விமர்சித்துள்ளார்கள்.
College Student gang-raped in Coimbatore: 7 Special Teams formed to nab the suspects
மாதிரி படம்
2 min read

கோவை விமான நிலையம் அருகே 20 வயது கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் - எஸ்ஐஹெச்எஸ் காலனி சாலை உள்ளது. இங்கு கல்லூரி மாணவியும் அவருடைய ஆண் நண்பரும் இரவு 11 மணியளவில் காரில் இருந்திருக்கிறார்கள். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல், இவர்களைத் தாக்கியுள்ளது. மூவரும் கார் கண்ணாடியை உடைத்து இருவரையும் தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. ஆண் நண்பரைத் தாக்கிய கும்பல், கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வேறோர் இடத்தில் வைத்து கல்லூரி மாணவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என்பது முதற்கட்ட தகவலில் வெளியாகியுள்ளது. காவல் துறையினருக்கு இச்சம்பவம் குறித்து தெரியவந்தவுடன், அப்பகுதியின் சுற்றுவட்டாரத்தில் தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளார்கள். அப்போது, ஆள் இல்லாத இடத்தில் கல்லூரி மாணவியைக் காவல் துறையினர் கண்டுள்ளார்கள். அங்கிருந்து மீட்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவியின் ஆண் நண்பர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

7 தனிப்படைகள் அமைப்பு

இந்தச் சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலையை உண்டாக்கியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

அதிமுக பொதுச்செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் காவல் துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

"2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும், பாதிப்புக்குள்ளான அம்மாணவி, 3.11.2025 அன்று அதிகாலையில் காவல் துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள் தமிழகத்தில் காவல் துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக, எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெரு நகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. ஜெயலலிதா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.

விடியா திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுக சார்பில் கண்களில் பெப்பர் ஸ்ப்ரே அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர்.

விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி,

கடும் தண்டனை வாங்கித்தர காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை விமர்சனம்

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இச்சம்பவத்துக்குக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை பதிவிட்டுள்ளதாவது:

"திமுக அமைச்சர்கள் முதல், காவல் துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல் துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் திரு முக ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்" என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Summary

Coimbatore police have formed seven special teams to trace and arrest the suspects involved in the alleged gang-rape of a college student near Coimbatore International Airport.

Rape | Gang-Rape | Coimbatore | Coimbatore Airport | Edappadi Palaniswami | Annamalai |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in