
கோவையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ரூ. 206 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது. மதுரையை போல கோவை மற்றும் திருச்சியிலும் பிரமாண்ட முறையில் நூலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமையவுள்ளது.
இதில் தமிழ் நூல்கள், ஆங்கில நூல்கள் வைக்கும் இடங்கள், அறிவியல், தொழில் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய அரங்கு, மெய்நிகர் காட்சி (விர்ச்சுவல் ரியாலிட்டி) அரங்கு, 3டி கட்டமைப்புகள், வான்வெளி கட்டமைப்புகள் சார்ந்த அரங்கு, தொலைநோக்கி மூலம் வான்வெளியை பார்க்கக்கூடிய கட்டமைப்பு, ஆன்லைன் முறையில் நூல்கள் படிக்கும் வகையிலான டிஜிட்டல் நூலகம் ஆகியவை ஏற்படுத்தப்பட உள்ளதாக கோவை பொதுபணித்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (நவம்பர் 6) அடிக்கல் நாட்டினார்.