
Coimbatore Serial Bomb Blast: கடந்த 27 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் குற்றவாளி ஒருவரை கோவை மாநகர காவல்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்புப் படை இணைந்து கைது செய்துள்ளது.
கோவை மாநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நபர், கோவை நகரத்தின் உக்கடம் பிலால் தோட்டத்தைச் சேர்ந்த சாதிக் என்கிற ராஜா என்கிற டெய்லர் ராஜா என்கிற வளர்ந்த ராஜா (வயது 48) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சிபிசிஐடி காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய நான்கு நபர்களில் இவரும் ஒருவர்.
கர்நாடகத்தில் கைது செய்யப்பட்ட ராஜா, நேற்று (ஜூலை 10) கோவைக்கு அழைத்து வரப்பட்டார். அவரை பி.ஆர்.எஸ். வளாகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ராஜாவின் நடமாட்டம் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கர்நாடகத்திற்குச் சென்று காவல்துறையினர் அவரைக் கைது செய்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்படுவதை தவிர்க்கும் நோக்கத்தில் 1998 முதல் அவர் தலைமறைவாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான எஸ்.ஏ. பாஷாவால் நிறுவப்பட்ட தடை செய்யப்பட்ட அல்-உம்மா அமைப்பின் முன்னணி செயல்பாட்டாளராக ராஜா இருந்ததாக கூறப்படுகிறது.
பிப்ரவரி 1998-ல் கோவை மாவட்டத்தை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகளில் ராஜா முக்கியப் பங்கு வகித்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தொழில்முறை தையல்காரராக இருந்த ராஜா கோவையின் உக்கடம் பகுதியில் இருக்கும் வள்ளல் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார், தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் பயன்படுத்திய வெடிகுண்டுகளை தயாரித்து அந்த வீட்டில் அவர் சேமித்து வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.