கோவை பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவரைச் சுட்டுப் பிடித்தது எப்படி?: காவல் ஆணையர் விளக்கம் | Coimbatore Gang Rape |

பிடிபட்ட மூவர் மீதும் ஏற்கெனவே கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன...
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர்
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர்
2 min read

கோவையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவரைச் சுட்டுப் பிடித்தது எப்படி என்று மாநகர காவல் ஆணையர் விளக்கமளித்தார்.

கோவை விமான நிலையம் அருகே ஆண் நண்பருடன் காரில் தனியாக இருந்த கல்லூரி மாணவியைக் கடத்தி, மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் உடனிருந்த ஆண் நண்பருக்கு அரிவாள் வெட்டு விழுந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ஏழு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்திய காவல்துறையினர், நேற்று (நவ.3) இரவு கோவை துடியலூர் அருகே சந்தேகத்துக்குரிய மூவரைச் சுட்டுப் பிடித்தனர். பிடிபட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், அவர்கள் பிடிபட்டது குறித்து கோவையில் மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:-

“கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினர் பல்வேறு விதமான அறிவியல்பூர்வ ஆதாரங்களைச் சேகரித்தனர். அதில் சந்தேகத்திற்கு உரிய சிலரைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் துடியலூர் பகுதியில் வெள்ளக்கிணறு என்ற இடத்தில் பதுங்கி இருந்ததாகத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவலர்கள் சந்தேகத்துக்குரிய நபர்களைப் பிடிக்க முயன்றபோது அவர்கள் தங்கள் ஆயுதங்களால் காவலர்களை தாக்கினர். அப்போது அரிவாளால் வெட்டியதில், தலைமைக் காவலர் சந்திரசேகருக்கு இடது கையில் வெட்டு விழுந்தது. போலீஸார் சுட்டதில் மூன்று பேருக்கும் காலில் காயம் ஏற்பட்டது. அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அந்த மூவரைக் கைது செய்துள்ளோம். அவர்கள், சதீஷ் (எ) கருப்பசாமி, குணா (எ) தவசி, கார்த்தி (எ) காளீஸ்வரன். இவர்கள் மூவரும் ஏற்கெனவே சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு முன்பு மூன்று பேரும் ஜாமினில் வெளிவந்தவர்கள். இவர்கள் மீது கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. க.க.சாவடி, துடியலூர் காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர்கள் மரம் வெட்டுதல், லேத் ஒர்க் போன்ற கிடைக்கும் வேலைகளுக்கு சென்று வந்துள்ளனர்.

சம்பவத்தன்று இவர்கள் மூவரும் இருகூரில் தாங்கள் வசிக்கும் பகுதியில் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு குடிபோதையில் திருட்டு வாகனத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்துள்ளார்கள். அப்போது காரில் இருவர் இருப்பதைக் கண்டதும் அவர்களை மிரட்டியுள்ளார்கள். முதலில் காரின் கண்ணாடியைக் கல்லால் உடைத்துள்ளார்கள். அதன்பின் அரிவாள் போன்ற ஆயுதங்களால் அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளார்கள். அதன்பிறகுதான் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் நடந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 200 முதல் 300 சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தோம். இவர்கள் சம்பவ இடத்திற்கு உள்ளே வந்தது, வெளியில் சென்றது போன்றவை ஆராயப்பட்டு, அதனடிப்படையில் மூவரைக் கண்டறிந்தோம். இனி அடுத்தகட்டமாக பிடிபட்டவர்களின் படங்களைப் பாதிக்கப்பட்டவர்கள் பார்த்து அடையாளம் காட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது முடிவதற்கு முன் ஊடகத்தில் பிடிபட்டவர்களின் படங்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். பிடிபட்டவர்களில் இருவருக்கு ஏற்கெனவே இதுபோன்று ஆளில்லாத இடத்தில் நிற்கும் கார்களை மிரட்டி திருட்டில் ஈடுபடும் பழக்கம் இருந்திருக்கிறது. இது தொடர்பான வழக்கு ஒன்றும் பதிவாகியிருக்கிறது. இது போன்ற ஆபத்தான காலத்தில் போலீஸாரை தொடர்பு கொள்ள காவல் உதவி ஆப் செயல்பட்டு வருகிறது. இந்த ஆப்பில் எஸ்.ஓ.எஸ். பட்டனை அழுத்தினாலோ அல்லது 3 முறை அசைத்தாலோ காவல்துறைக்கு புகார் செல்லும். உடனே தகவல் வந்த இடத்தைக் கண்டறிந்து யாரேனும் ஆபத்தில் சிக்கி இருந்தால் மீட்க முடியும்” என்றார்.

Summary

The Coimbatore City Police Commissioner provided an explanation on how the three accused in the sexual assault case were shot and arrested.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in