கோவை மருத்துவமனையில் திருட முயன்ற நபர் அடித்துக் கொலை: 15 பேர் கைது

உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கோவை தனியார் மருத்துவமனையில் திருட முயன்ற நபர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 15 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை அவிநாசி சாலையில் அமைத்திருக்கும் தனியார் மருத்துவமனை வளாகத்துக்குள் கடந்த மே 27 அன்று ராஜா என்பவர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனைக் கண்ட மருத்துவமனையின் பாதுகாவலாளிகள் அந்நபரை பிடித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலரும் ஒன்று சேர்ந்து ராஜாவை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் பிறகு படுகாயமடைந்த ராஜா மயங்கி நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், ராஜாவை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்ததாகத் தெரிகிறது. அங்கு ராஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ராஜா நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து மருத்துவமனை சார்பில் இந்த தகவல் பீளமேடு காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் ராஜா அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அந்த மருத்துவமனையின் துணைத் தலைவர், ஊழியர்கள் உட்பட15 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த வழக்குத் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகத்தின் பெயரை சேர்க்காவிட்டால் ராஜாவின் உடலை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in