கோவை பூ மார்கெட்டில் ஆடை சர்ச்சை: நடந்தது என்ன? | Coimbatore | Flower Market |

"நான் எந்த மாதிரியான ஆடையை அணிய வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்."
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்
1 min read

கோவை பூ மார்கெட்டில் ஆடை சர்ச்சை தொடர்பாக இளம்பெண் மற்றும் பூ வியாபாரிகள் இடையிலான உரையாடல் பேசுபொருளான நிலையில், இரு தரப்பும் புகாரளித்துள்ளார்கள்.

கோவையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஜனனி 20. இவர் ஆந்திரத்தில் செயல்படும் கல்லூரி ஒன்றில் சட்டம் பயின்று வருகிறார். கோவையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களில் இவருடைய தாயார் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார்.

கோவையில் ஆர்எஸ் புரம் அருகேவுள்ள பூமார்கெட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் அமைப்பு சார்பில் ஓவியப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட ஜனனி, பயிற்சியைத் தொடர்ந்து பூமார்கெட்டுக்குள் (மலர் சந்தை) சென்றிருக்கிறார்.

பூமார்கெட்டில் இருந்த சிலர், ஸ்லீவ்லெஸ் ஆடையை அணிந்து வந்ததற்காக ஜனனிக்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வியெழுப்பியதாகத் தெரிகிறது. இதுபற்றிய உரையாடலின்போது, சம்பந்தப்பட்ட பெண்ணை அச்சுறுத்தும் விதமாக அங்கிருந்த ஆண்கள் சிலர் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுபோன்ற ஆடைகளை அணிந்து வந்ததால், பெண்கள் சிலர் பிரச்னையை எதிர்கொண்டதாகவும் அவர்கள் தரப்பில் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

கோவை பூமார்கெட்டில் ஜனனி மற்றும் அங்கிருந்தவர்கள் இடையிலான உரையாடல்கள் காணொளியாகப் பதிவாகி செய்திகளில் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கோவை மாநகரக் காவல் ஆணையரிடம் ஜனனி புகாரளித்துள்ளார்.

"பூ மார்கெட்டில் இதுமாதிரியான ஆடை அணிந்து வந்ததால், பெண்கள் சிலர் பிரச்னைகளை எதிர்கொண்டதாகச் சொல்லி என்னை அச்சுறுத்தினார்கள். அந்தச் சம்பவம் எனக்கும் நேரிடலாம் என்றார்கள். என்னையும் என் நண்பரையும் பூமார்கெட்டிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். நான் எந்த மாதிரியான ஆடையை அணிய வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார் ஜனனி.

இதேபோல பூ வியாபாரிகள் நலச் சங்கம் சார்பிலும் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ் புரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை மாலை புகாரளிக்கப்பட்டுள்ளது.

"சம்பந்தப்பட்ட பெண் காணொளி எடுப்பதற்காக பூமார்கெட்டுக்கு தனது நண்பருடன் வந்தார். தங்களுடைய வியாபாரம் பாதிக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தொல்லையாக இருக்கும் என்பதால், காணொளியைப் பதிவு செய்ய வேண்டாம் என பூ வியாபாரிகள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். எனினும், சம்பந்தப்பட்ட பெண் காணொளியைப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அப்பெண்ணின் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பூ வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coimbatore | Flower Market |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in