
அதானி நான் சந்தித்ததில்லை என சட்டப்பேரவையில் நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதைத் தொடர்ந்து, முதல்வரின் மருமகன் சபரீசனும், தொழிலதிபர் கௌதம் அதானியும் சந்தித்துள்ளதாக இன்று குற்றம்சாட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இது தொடர்பாக சென்னையில் இன்று (டிச.11) செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசியவை பின்வருமாறு,
`தமிழக முதல்வர் கலைஞர் கைவினை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் கைவினை கலைஞர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தும் திட்டமாக இது இருக்கிறது. இது மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்திற்கு நேரெதிராக இருப்பது மட்டுமல்லாமல், கைவினை கலைஞர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கும் என தமிழக பாஜக கருதுகிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தின் கீழ், 18 வயதிற்கு மேல் இருக்கும் விஸ்வகர்மா உள்ளிட்ட 18 சமூகங்களை சேர்ந்த நபர்களுக்கு ரூ. 3 லட்சம் வரை மானியம், வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆனால் மாநில அரசு கொண்டுவந்துள்ள திட்டத்தின் கீழ் 35 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கைவினை திட்டத்தைக் கைவிடவேண்டும்.
அதானி குழுமத்திற்கு திமுக அரசு ஒப்பந்தங்களை கொடுத்துள்ளது என்பதை தொடர்ந்து பேசிவருகிறோம். அதற்கு பதிலளித்துள்ள திமுக அமைச்சர் அது அதிமுக ஆட்சியின்போது கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் என தகவல் தெரிவித்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கமுதியில் சூரிய ஒளி மின்சக்தி நிலையம் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் என் மீது அபாண்டமாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர், நான் அதானியை சந்தித்தது இல்லை என நேற்று சட்டமன்றத்தில் முதல்வர் பேசினார். முதல்வர் அதானியை சந்தித்தார் என நாங்களும் கூறவில்லை. அதானியை சந்திப்பது குற்றமும் அல்ல. ஆனால் நீங்கள் அதானிக்கு ஒப்பந்தம் வழங்கியிருப்பதையே நாங்கள் கேள்வி கேட்கிறோம்.
உங்கள் மருமகனும், அதானியும் சந்தித்தனர் என்ற குற்றச்சாட்டை நாங்கள் முன்வைக்கிறோம். உங்கள் சார்பாக உங்களை சார்ந்து இருக்கக்கூடிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதானி நிறுவன அதிகாரிகளை சந்தித்துள்ளனர். கடந்த வாரமும் சந்திப்பு நடந்துள்ளது. உங்கள் மருமகன் சபரீசன் சந்திக்கவில்லை என சட்டமன்றத்தில் உங்களால் கூற முடியுமா?’ என்றார்.