கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி

"தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழ்நாடு அரசும் உறுதியாக உள்ளது".
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்ANI

மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் கோரிக்கையை ஏற்று கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மாநில தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.

இதைத் தொடர்ந்து கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

இது குறித்து டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது:

“கடந்த சில நாள்களாக, கோவை முழுவதும் நாங்கள் பிரசாரம் செய்தபோது, விளையாட்டில் அதிகம் ஆர்வமுள்ள பல இளைஞர்களை சந்தித்தோம். தடகளம், துப்பாக்கிச் சுடுதல், கார் பந்தயம், கால்பந்து, ஸ்கேட்டிங் போன்ற பல்வேறு விளையாட்டுகளில் இளைஞர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் கோவையின் ஆர்வம் நிகரற்றது. கோவை, மூன்று டிஎன்பிஎல் அணிகளின் உரிமையாளர்களின் தாயகமாகும். மேலும், வளர்ந்து வரும் தேசிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் தமிழ்நாட்டின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே, இவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஒரு புத்தம் புதிய உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானத்தை கோவையில் உருவாக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த மு.க. ஸ்டாலின் கூறியதாவது:

“மக்களவைத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் மேலும் ஒரு வாக்குறுதியாக இதனை சேர்க்க விரும்புகிறேன். அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டபடி சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு அடுத்ததாக கோவையில், தமிழ்நாட்டின் 2-வது சர்வதேச மைதானமாக இது அமையும். தமிழ்நாட்டில் விளையாட்டு துறையை மேம்படுத்துவதில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழ்நாடு அரசும் உறுதியாக உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in