சமரச பாயாசம் கிண்டுகிற ஒருவரோடு மேடையை பகிர முடியாது: வன்னியரசு

சமரச பாயாசம் கிண்டுகிற ஒருவரோடு மேடையை பகிர முடியாது: வன்னியரசு

அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என எங்கள் தலைவர் திருமாவளவன் கூறவில்லை.
Published on

சமரச பாயாசம் கிண்டுகிற ஒருவரோடு திருமாவளவன் மேடையை பகிர முடியாது என தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்துள்ளார் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு.

தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் வன்னியரசு பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`நாளை (டிச.6) நடக்கவிருக்கும் ‘அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில், திமுக கொடுத்த நெருக்கடியால்தான் எங்கள் தலைவர் போகவில்லை என சில அரசியல் தரகர்கள் உள்நோக்கம் கற்பிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சில ஊடக நிறுவனங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றன. அம்பேத்கரின் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, தங்களது அரசியல் சதி வெற்றி பெற வேண்டுமென அவர்கள் துடிக்கிறார்கள்.

அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமாட்டேன் என எங்கள் தலைவர் கூறவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த புரிதல் எதுவுமில்லாமல் அரசமைப்புச் சட்டத்தை ஒரு கையிலும் பகவத் கீதையை இன்னொரு கையிலும் வைத்துக்கொண்டு சமரச ‘பாயாசம்’ கிண்டுகிற ஒருவரோடு மேடையைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்றுதான் சொன்னார்.

ஆனால் நூல் வெளியீட்டாளர்கள் எமது தலைவரைப் புறக்கணித்துவிட்டு பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், எங்கள் தலைவர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது எமது தலைவரை அவமதிப்பது மட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கரையும் அவமதிப்பதே ஆகும்.

நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், புரட்சியாளர் அம்பேத்கரும், எழுச்சித் தமிழரும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in