
மெத்தப் படித்த அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனையும், உதயநிதி ஸ்டாலினையும் ஒரே தராசு தட்டில் வைத்து ஒப்பிட முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
கோவையில் நடைபெற்ற ஒரு தனியார் கருத்தரங்கில் கலந்துகொண்டு நேற்று (டிச.1) அண்ணாமலை பேசியவை பின்வருமாறு,
`சமீபத்தில் நான் ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சென்று படித்துவிட்டு வந்தேன். அப்போது செய்தித்தாள் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன்.
அன்னை தமிழ்நாட்டை ஆளப்பிறந்தவரே, ஆரியம் வென்ற திராவிடத் திருமகனே, இளைஞர்களின் எழுச்சி நாயகனே, ஈடு இணையற்ற வெற்றிச் சரித்திரமே, உடன்பிறப்புகளின் உயிரோவியமே, ஊர் உலகம் மெச்சும் கொள்கை வீரனே, எல்லோருக்குமானவரே, ஏற்றம் தரும் நாயகரே, ஐந்து எழுத்து மந்திரமே, ஒட்டு மொத்த தமிழர்களின் நம்பிக்கையே, ஓய்வறியா உழைப்பின் திராவிட தலைமுறையே, ஒளதாரியம் நிறைந்தவரே என அதில் இருந்தது.
வழக்கமாக திமுகவில் யாரோ விளம்பரம் கொடுத்துள்ளார்கள் என நினைத்தேன். ஆனால் அண்ணன் பிடிஆர் அதைக் கொடுத்துள்ளார். இதற்காகத்தான் அவர் அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்றாரோ என நினைத்தேன். அறிவாளிகள் கூட அடிமைகளாக இருந்தால்தான் அரசியல் செய்யமுடியும் என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது.
அண்ணன் பிடிஆரை நான் குறை கூறவில்லை. மெத்தப்படித்தவர், பெரும் நிறுவனத்தில் பணி செய்தவர். தமிழகத்தின் நிதி அமைச்சராக இருந்தார், தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும் இருக்கிறார். அவர் திறமையானவர், பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர். தன் சொந்தத் தொகுதியில் பணம் கொடுக்காமல் அவர் வெற்றிபெற்றார் என்பதே உண்மை.
மாற்றுக் கட்சியில் இருந்தாலும் அவரை நான் பாராட்டுகிறேன். ஆனால் அவரும் இது போல விளம்பரம் கொடுத்துள்ளார். அவரையும், உதயநிதி ஸ்டாலினையும் தராசு தட்டில் வைத்து ஒப்பிட முடியாது. இன்று உள்ள அரசியல் அறிவாளிகளை அடிமைவாதிகளாக மாற்றுகிறது என்றால் இது எங்குபோய் முடியும்? இதை நடுத்தர மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்’ என்றார்.