
திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் மேற்கொள்ளச் சென்ற மத்திய இணையமைச்சர் எல். முருகனை தமிழக காவல்துறை அவமதித்ததாகக் கூறி டிஜிபி சங்கர் ஜிவாலுக்குக் கடிதம் எழுதியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
மத்திய இணையமைச்சர் எல். முருகன் கடந்த பிப்.17-ல் சுவாமி தரிசனம் மேற்கொள்ள மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குச் சென்றார். சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது,
`கடந்த பிப்.17-ல் மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள சென்ற மத்திய இணையமைச்சர் எல். முருகனை வேண்டுமென்றே கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மத்திய அமைச்சர் செல்லும் பயணதிட்டம் குறித்து முன்கூட்டியே காவல்துறையிடம் உரிய தகவல் தெரிவிக்கப்பட்டும் கூட, கோயில் நுழைவாயிலில் இருந்த காவல்துறையினரால் மத்திய அமைச்சருக்கு அவமதிப்பு நடைபெற்றுள்ளது.
கோயிலுக்குள் செல்ல விடாமல் தன்னை தடுப்பதற்கான காரணம் குறித்து அங்கிருந்த காவலர்களிடம் மத்திய அமைச்சர் கேட்டதற்கு, மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக அவர்கள் பதிலளித்துள்ளார்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கும் மத வழிபாடு மேற்கொள்ளும் உரிமையை மறுக்க, காவல்துறை அதிகாரம் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதே இந்த பிரச்னையின் மையப்புள்ளி.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருப்பவருக்கே இந்த நிலை என்றால், நமது மாநிலத்தின் சாதாரண பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும்?’ என்றார்.