

மக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதலமைச்சருக்கு அருவருப்பாக இல்லையா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் விடுமுறை நாள்களில் அரசு மதுபானக் கடைகளில் விற்பனை அதிக அளவில் நடைபெறும். அதன்படி வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டிய விடுமுறைக்கும் அதிக அளவில் மது விற்பனை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கோவையில் உள்ள அரசு மதுபானக் கடைகள் பலவற்றில் காலவாதியான மது பாட்டில்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நேற்று (ஜன. 12) செய்தி வெளியாகியிருந்தது.
மதுபானக் கடைகளில் பழைய பாட்டில்கள்
அதில் 2018-ல் நிரப்பப்பட்ட பாட்டில்களையே பல கடைகளில் விற்று வருவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பல பாட்டில்களில் ஒரே பார் கோடு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சில நிறுவனங்கள் அரசு மதுபானக் கடைகளுக்கு மது விற்கும் ஒப்பந்தத்தைக் கடந்த ஆண்டே நிறுத்திக் கொண்ட பிறகும் தொடர்ந்து அந்நிறுவனங்களின் பெயரில் மது பாட்டில்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
“கோயம்புத்தூரில், பொங்கல் பண்டிகை விற்பனைக்காக, தேதி காலாவதியான மதுவை டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு திமுக அரசு வைத்திருப்பதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் உயிர், உடல்நலம், குறித்து சிறிதளவும் அக்கறை இல்லாமல், வருமானம் வந்தால் போதும் என்ற ஒரே நோக்கம் கொண்ட திமுக அரசின் இந்தச் செயல்பாடு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சரைச் சாடிய அண்ணாமலை
மது விற்பனை மூலமாக பல ஆயிரக்கணக்கான கோடிகள் வருவாய் ஈட்டும் திமுக அரசு, குறைந்தபட்சம், விற்பனை செய்யும் மதுவின் தரத்தைக் கூடப் பாதுகாக்கத் தவறுவது, திட்டமிட்ட குற்றம். காலாவதியான மதுவை விற்பதால் பாதிக்கப்படுவது முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பமோ, அல்லது திமுக அமைச்சர்கள் குடும்பமோ அல்ல, அப்பாவி பொதுமக்களும், அவர்களது குடும்பங்களும் மட்டுமே. பொதுமக்களின் உயிரை வைத்து வருமானம் ஈட்ட முதலமைச்சருக்கு அருவருப்பாக இல்லையா?” என்று பதிவிட்டுள்ளார்.
Annamalai has questioned whether the Chief Minister is ashamed of earning money at the expense of people's lives.