தமிழகத்தில் தினமும் ஒரு பாலியல் குற்றம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை.
தமிழகத்தில் தினமும் ஒரு பாலியல் குற்றம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ANI
1 min read

பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தாக்குதல் ஏற்பட்ட சம்பவத்தை முன்வைத்து, தமிழகத்தில் தினமும் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருவதாகக் கூறி தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் தனியாகச் சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்து அவரது நகையைப் பறிக்க ஒருவர் முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர் கூச்சலிடவே, அருகில் இருந்த பொதுமக்கள் அந்த நபரை வெகுவாகத் தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்கள்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து, தன் எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை கூறியதாவது,

`சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது.

அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்?’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in