
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி முடிவானதும், கூட்டணி ஆட்சி குறித்து அதிமுக, பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருவது தொடர்கதையாக உள்ளது.
நேற்று (ஜூலை 16) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, `எங்கள் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்றுதான் அமித்ஷா சொல்கிறார்; கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை’ என்றார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் இன்று (ஜூலை 17) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பாக அண்ணாமலை பேசியதாவது,
`இன்றைக்கு பாஜகவின் தொண்டனாக நான் இருக்கிறேன். இந்த கூட்டணி உருவானதில் என் பங்கு இல்லை. இந்த கூட்டணி குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் என் பங்கு இல்லை. இந்த கூட்டணி எப்படி இருக்கவேண்டும் என்று பேசப்பட்டதிலும் என்னுடைய பங்கு இல்லை.
அப்படி இருக்கும்போது என் தலைவர் அமித்ஷா கூறியதைத்தான் நான் கேட்டாகவேண்டும். ஒரு முறை அல்ல, பல பத்திரிகைகளில் அவர் மிகத் தெளிவாக சொல்லிய பிறகு, ஒரு தொண்டனாக என் கருத்தை மாற்றிக்கொண்டு கூட்டணி ஆட்சி இல்லை என்று நான் கூறினால் இந்த கட்சியில் தொண்டனாக இருப்பதற்கு எனக்குத் தகுதியில்லை.
என்னுடைய தலைவர் கூறிய கருத்தை நான் ஏற்றுக்கொள்ள முடியாமல், என் தலைவரின் கருத்தை நான் வலுப்படுத்த முடியாமல், என் தலைவர்கள் கூறிய கருத்தில் நான் சந்தேகத்தை எழுப்பினால் இந்த கட்சியில் நான் தொண்டனாக இருக்க முடியாது.
என் தலைவர்கள் பேசியதை நான் தூக்கிப்பிடித்தாகவேண்டும். இந்த கூட்டணியை உருவாக்கிய உள்துறை அமைச்சர் ஒரு கருத்தை சொல்லிய பிறகு, அந்த கருத்தை தொண்டனாக நான் எப்படி மாற்றிப்பேச முடியும்? அமித்ஷா ஜி தொடர்ந்து கூறி வருகிறார், ஒரு முறை இரு முறை அல்ல, மூன்று முறை கூறியுள்ளார்.
அதில் அதிமுகவினருக்கு மாற்றுக் கருத்து இருந்தால், நிச்சயமாக அவர்கள் அமித்ஷாவிடம் பேசலாம்’ என்றார்.