சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற சாலை ஃபார்முலா கார் பந்தயத்தை அரசு, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சாத்தியப்படுத்தியதாக அஜித் பாராட்டு தெரிவித்துள்ளார்.
துபாய் 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமாரின் அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடம் பிடித்தது. அஜித் குமாரின் இந்த வெற்றி தமிழ்நாட்டில் கோலாகலமாகப் பேசப்பட்டது. திரைத் துறையினர், அரசியல் பிரபலங்கள் எனப் பலர் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, அஜித் கொடுத்த நேர்காணல்களும் அவருடையக் கருத்துகளும் இங்கு பலரது மனங்களை வென்றன.
இந்த நிலையில், கார் பந்தய வெற்றிக்குப் பிறகு அஜித் கொடுத்த நேர்காணலின் அடுத்த காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தனக்கு ஆதரவாக இருந்த மனைவி ஷாலினி, குழந்தைகள், குடும்பத்தினர், சுரேஷ் சந்திரா எனப் பலருக்கு அஜித் குமார் நன்றி தெரிவித்தார். இந்த வரிசையில் தமிழ்நாடு அரசின் ஆதரவுக்கும் அவர் தெரிவித்தார்.
"ஆட்சியில் உள்ளவர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மோட்டார் விளையாட்டுகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இரவு நேரத்தில் நடத்தப்படும் சாலை ஃபார்முலா கார் பந்தயம் முதன்முறையாக சென்னையில் நடைபெற்றது. அரசு, முதல்வர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். மோட்டார் விளையாட்டுகளுக்கு இது பெரிய ஊக்கத்தைக் கொடுக்கும்" என்றார் அஜித் குமார்.
அஜித் குமாரின் இந்த நேர்காணல் தற்போது சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
துபாய் கார் பந்தயம் வெற்றியைத் தொடர்ந்து, தெற்கு ஐரோப்பிய சீரிஸ் 2025-ல் பங்கெடுப்பதற்கான பயிற்சியை, அஜித் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்.