விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி எழுமலையானை தரிசிக்க புதிய நேரம் அமல்! | Tirupati | TTD

ஏழுமலையானை தரிசனம் செய்ய மூன்று நாள்கள் வரை காத்திருக்கும் பக்தர்களின் காத்திருப்பு காலத்தை கணிசமாகக் குறைப்பது இந்த புதிய நடவடிக்கையின் நோக்கமாகும்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் - கோப்புப்படம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் - கோப்புப்படம்
1 min read

உலகப்புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD), நாளை (ஆகஸ்ட் 1) முதல் `விஐபி தரிசன டிக்கெட்டுகளை’ வைத்திருப்பவர்களுக்கு புதிய தரிசன நேரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பக்தர்கள் ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம், விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. இந்த டிக்கெட்டைக் கொண்டு விரைவாகவும் மிக அருகிலும் சென்று ஏழுமலையானத் தரிசிக்க முடியும்.

தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடையுடன், கூடுதலாக ரூ. 500 அளித்து டிக்கெட் பெறும் பக்தருக்கு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் வழங்கப்படும்.

விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை இணையம் வாயிலாகப் பெற மூன்று மாதங்களுக்கு முன்பு முன்பதிவு செய்யவேண்டும். அதேபோல நேராகச் சென்று திருமலையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்கள் ஒரு நாள் காத்திருந்து மறுநாள் காலை 6 மணிக்குத்தான் ஏழுமலையானைத் தரிசனம் செய்யமுடியும். இதுதான் இதுவரையிலான நடைமுறை.

இந்நிலையில், இந்த விஐபி பிரேக் தரிசன நடைமுறையில், புதிய மாற்றங்களை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை அதாவது ஆகஸ்ட் 1 முதல் 15 வரை திருமலை அல்லது திருப்பதி விமான நிலையத்துக்குக் காலையில் நேராகச் சென்று விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்கள் அதே நாள் மாலை 4.30 மணிக்கே ஏழுமலையானைத் தரிசனம் செய்யலாம்.

ரூ. 10,500 மதிப்புள்ள பிரேக் தரிசன டிக்கெட்டுகள் எண்ணிக்கையில் திருமலையில் 800-ம் திருப்பதி விமான நிலையத்தில் 200-ம் வழங்கப்படுகின்றன. எனினும் ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 31 வரை பழைய நடைமுறையே பின்பற்றப்படும். அதாவது டிக்கெட் வாங்கப்பட்ட மறுநாள் தான் தரிசனம் செய்ய முடியும்.

நவம்பர் 1 முதல் நேரிலும் இணையம் வழியாகவும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளைப் பெறும் பக்தர்கள் அதே நாளில் மாலை 4.30 மணி அளவில் ஏழுமலையானைத் தரிசிக்க முடியும். அதுவரை பழைய நடைமுறையே தொடரும்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in