
ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயில், உலகப் புகழ் பெற்றதாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், உலகம் முழுவதிலும் இருந்தும் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வருகை தருவார்கள்.
கூட்ட நெரிசலில் சிக்காமல், விரைவாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வி.ஐ.பி. பிரேக் தரிசன நடைமுறை அமலில் உள்ளது. ஆனால் இதன் கீழ் தரிசனம் மேற்கொள்ள நபர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்கவேண்டும்.
அதேநேரம் நன்கொடை வழங்காமல் வி.ஐ.பி. பிரேக் தரிசன முறையில், ஏழுமலையானை விரைவாகவும், இலவசமாகவும் குடும்பத்துடன் தரிசிக்க மாற்று ஏற்பாடு ஒன்று உள்ளது.
பாரம்பரிய வழக்கங்களை இளைய தலைமுறையினரிடம் கொண்டுச்சேர்க்கும் வகையில் `கோவிந்த கோடி நாமம் திட்டம்’ புதிதாக செயல்படுத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த 2023-ல் அறிவித்தது.
`ஸ்ரீ ராம ஜெயம்’ என்று ராம நாமம் எழுதுவதைப்போல, 25 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு கோடி முறை `கோவிந்தா’ நாமம் எழுதி எடுத்துவந்தால், அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஏழுமலையானை தரிசிக்க வி.ஐ.பி. தரிசன வசதியை தேவஸ்தான நிர்வாகம் ஏற்படுத்தித்தரும்.
மேலும், கோவிந்தா நாமத்தை 10,01,116 முறை எழுதி வரும் நபருக்கு (அவருக்கு மட்டும்), வி.ஐ.பி. தரிசனம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும்.