யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா

ஆட்சேர்ப்பின்போது இதுபோல எத்தனை தகுதியற்ற நபர்கள் அரசின் உயர் பதவிகளுக்குள் நுழைந்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது
யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா
ANI
1 min read

அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளை நடத்தும் தன்னாட்சி அமைப்பான யுபிஎஸ்சி-யின் தலைவர் மனோஜ் சோனி தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவிக்காலம் முடிய இன்னும் ஐந்தாண்டுகள் இருக்கும் நிலையில் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மனோஜ் சோனி.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ள தன் ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காகத் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக மனோஜ் சோனி குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மனோஜ் சோனியின் ராஜினாமா இன்னும் குடியரசுத் தலைவரால் ஏற்கப்படவில்லை.

யுபிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு, 2017 முதல் 2023 வரை யுபிஎஸ்சி-யின் உறுப்பினராக செயல்பட்டார் மனோஜ் சோனி. அதற்கும் முன்பு இரண்டு முறை டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், ஒரு முறை பரோடா மகாராஜா சாயாஜி ராவ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, சட்டவிரோதமாக ஓபிசி சான்றிதழையும், மாற்றுத் திறனாளி சான்றிதழையும் சமர்ப்பித்து, மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பூஜா கேத்கர் என்ற நபர் 2022-ல் நடந்த குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. நேற்று (ஜூலை 19) பூஜா கேத்கரின் தேர்ச்சியை ரத்து செய்ய நோட்டீஸ் பிறப்பித்தது யுபிஎஸ்சி.

`பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், போலி ஆவணங்களை சமர்ப்பித்து அகில இந்திய குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம், யுபிஎஸ்சி-யின் ஆட்சேர்ப்பு செயல்முறையின் நேர்மை குறித்த தீவிர சந்தேகம் எழுப்புகிறது’ என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டிருந்தார்.

`ஆட்சேர்ப்பின்போது இதுபோல எத்தனை தகுதியற்ற நபர்கள் அரசின் உயர் பதவிகளுக்குள் நுழைந்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்டக் குழுவை அமைத்து முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்’ என்றும் தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார் பவன் கேரா.

logo
Kizhakku News
kizhakkunews.in