
இந்திய அரசியலமைப்பின் உணர்வை சீர்குலைக்கும் முயற்சியாக 1975-ல் அன்றைய மத்திய அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலையை துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற தனிநபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் வகையிலான தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (ஜூன் 25) நிறைவேற்றியது.
1975 ஜூன் 25 அன்று இந்தியாவில் அவசரநிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்டது. அதன் 50-வது நினைவு நாளான இன்றைய தினம், `அரசியலமைப்பு படுகொலை நாளாக’ (Samvidhan Hatya Diwas) கடைபிடிக்கப்படும் என்று கடந்தாண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.
இதை முன்னிட்டு, தன் எக்ஸ் கணக்கில் இன்று (ஜூன் 25) பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி,
`இந்திய ஜனநாயக வரலாற்றின் இருண்ட பக்கங்களை நினைவுபடுத்தும் அவசரநிலையின் 50-வது ஆண்டு நாளான இன்றைய தினத்தை, இந்திய மக்கள் இந்த நாளை ‘அரசியலமைப்பு படுகொலை நாளாக’ நினைவு கூர்கின்றனர்.
இந்த நாளில் இந்திய அரசியலமைப்பு வகுத்துக் கொடுத்த மதிப்பீடுகள் புறந்தள்ளப்பட்டன. மக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன. ஊடகச் சுதந்திரம் பறிக்கப்பட்டது, அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சாமான்ய மக்கள் எனப் பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இத்தகைய நெருக்கடிகள் மூலம் காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தையே சிறை வைத்தது. இந்த நாளில், அவசரநிலையை எதிர்த்து நின்ற ஒவ்வொருவருக்கும் எங்கள் வணக்கத்தை உரித்தாக்குகிறோம்’ என்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று (ஜூன் 25) நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,
`2025-ம் ஆண்டு சம்விதான் ஹத்ய திவாஸின் 50 ஆண்டுகளைக் குறிக்கிறது - இந்திய வரலாற்றில் இது அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்ட, இந்தியாவின் குடியரசு மற்றும் ஜனநாயக உணர்வு தாக்கப்பட்ட, கூட்டாட்சிக் கொள்கை குறைத்து மதிப்பிடப்பட்ட, அடிப்படை உரிமைகள், மனித சுதந்திரம் மற்றும் கண்ணியம் இடைநீக்கம் செய்யப்பட்ட மறக்க முடியாத அத்தியாயமாகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளின் மீள் தன்மை மீதும் இந்திய மக்கள் தொடர்ந்து அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை மத்திய அமைச்சரவை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து, நமது அரசியலமைப்பையும் அதன் ஜனநாயகக் கட்டமைப்பையும் பாதுகாக்க உறுதியாக நின்றவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவது இளைஞர்களைப் போலவே முதியவர்களுக்கும் முக்கியமானது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.