திருப்பதி லட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்துவதற்காக திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏஆர் டயரி ஃபுட்ஸ் நிறுவனம் அனுப்பிய நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொது மேலாளர் (கொள்முதல்) பி. முரளி கிருஷ்ணா என்பவர் கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தில் முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி கோயிலில் லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதன்பிறகு, ஆய்வு முடிவில் லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு இருந்திருக்கலாம் என உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கப்படும் நெய்யின் தரம் மோசமாக இருப்பதாக நெய் விநியோகம் செய்யும் அனைவருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நெய் விநியோகம் செய்யும் அனைத்து நிறுவனங்களும் நெய்யின் தரத்தை உயர்த்தியபோதிலும், ஒரு நிறுவனம் (ஏஆர் டயரி ஃபுட்ஸ்) மட்டும் நெய்யின் தரத்தை உயர்த்தவில்லை என்று தேவஸ்தானம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.