தேவாலயத்தில் வழிபாடு: ஊழியரை பணியிடை நீக்கம் செய்த திருப்பதி தேவஸ்தானம்!

தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் துறை சமர்ப்பித்த அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களை ஆராய்ந்தபிறகு, விதிகளின்படி அவர் மீது துறைரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டது.
திருப்பதி கோயில் - கோப்புப்படம்
திருப்பதி கோயில் - கோப்புப்படம்
1 min read

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், அதன் உதவி நிர்வாக அதிகாரி ராஜசேகர் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ள தனது சொந்த ஊரான புத்தூரில் இருக்கும் தேவாலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் பிரார்த்தனைகளில் ராஜசேகர் பாபு கலந்துகொண்டதாக, பணியிடை நீக்கம் குறித்து தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

`திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஊழியராக இருந்துகொண்டு தேவஸ்தானத்தின் நடத்தை விதிகளைப் பின்பற்றாததால், இது தேவஸ்தானத்தின் விதிமுறைகளை மீறும் செயலாகும். மேலும் ஒரு ஹிந்து மத அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர் என்ற வகையில் அவர் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளார்.

இந்த சூழலில், தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் துறை சமர்ப்பித்த அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களை ஆராய்ந்தபிறகு, விதிகளின்படி அவர் மீது துறைரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டது. மேலும் அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நண்பர்களைச் சந்திக்க சில முறை மட்டுமே தேவாலயத்திற்குச் சென்றதாக இந்த விவகாரம் குறித்து தேவஸ்தான நிர்வாகத்திடம் ராஜசேகர் பாபு விளக்கமளித்தார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேட்டியளித்த ராஜசேகர் பாபு,

`தேவஸ்தானத்தின் மூத்த உறுப்பினராக, யாராவது என்னை ஒரு கோவிலுக்கோ அல்லது தேவாலயத்துக்கோ அழைத்தால் நான் அங்கு செல்வேன். நான் எந்த மதத்தைப் பின்பற்றுகிறேன் என்பது முக்கியமல்ல. தேவஸ்தான விதிகளை கடைபிடிக்க நான் எப்போதும் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்’ என்றார்.

தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்தாண்டு ஜூன் மாதம் ஆந்திர பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பல்வேறு பதவிகளில் இருந்த ஹிந்து அல்லாத ஊழியர்களை தேவஸ்தான நிர்வாகம் பணியிட மாற்றம் செய்தது.

கடைசியாக கடந்த பிப்ரவரியில், ஹிந்து அல்லாத பிற மதங்களைச் சேர்ந்த 18 ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in