
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து விசாரிக்க சிபிஐ இயக்குநர் மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஆட்சியின்போது, திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக செப்டம்பர் 25-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, செப்டம்பர் 26-ல் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இதனிடையே, லட்டு விவகாரம் தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஒய்வி சுப்பா ரெட்டி ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
லட்டு தொடர்புடை வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 30 அன்று நடைபெற்றது. அப்போது, சந்திரபாபு நாயுடு கடவுளை அரசியலிலிருந்து தள்ளி வைத்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழு விசாரணையைத் தொடரலாமா அல்லது சுயாதீன அமைப்பு விசாரணை நடத்த வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவைக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஆர் கவாய் மற்றும் கேவி விஸ்வநாதன் ஆகியோர் விசாரித்தார்கள். சிபிஐ இயக்குநர் மேற்பார்வையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
5 பேர் கொண்ட இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் சிபிஐ மற்றும் ஆந்திரப் பிரதேச காவல் துறையிலிருந்து தலா இருவர் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையிலிருந்து மூத்த அதிகாரி ஒருவர் இடம்பெறவுள்ளார்கள். சிபிஐ இயக்குநர் மேற்பார்வையில் விசாரணை நடைபெறும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.