

குடியுரிமையைப் பரிசோதிக்கும் ஆவணங்களைக் கோரும் சிறப்பு தீவிர திருத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திருமவளவன் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேசியதாவது:-
“சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வரும் நிலையிலும், இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. சிறப்பு தீவிர திருத்தம் என்பது தேர்தல் காலம் அல்லாத பிற காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது வாக்காளர்களின் குடியுரிமையைப் பரிசோதிப்பதற்கான நடவடிக்கையாக இதனை மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின்படி செயல்படக்கூடிய தேர்தல் ஆணையம், வாக்காளரின் குடியுரிமையைச் சோதிக்க அதிகாரம் கொண்டிருக்கிறதா?
அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் இப்படிச் செயல்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. வாக்குரிமையைப் பறிப்பது மட்டுமல்லாமல், மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சியாக இது அமைந்திருக்கிறது. பிஹாரில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவி வரக்கூடியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆளுங்கட்சி தரப்பிலும் தேர்தல் ஆணையத்தின் தரப்பிலும் சொல்லப்படுகிறது. ஆனால் பிஹாரில் நீக்கப்பட்டுள்ள 47 லட்சம் பேரில் யாராவது ஒருவரையேனும் அண்டை நாட்டைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காட்ட முடியுமா? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அத்தனைபேரும் இந்திய குடிமக்கள். பிஹாரைச் சேர்ந்தவர்கள்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 13 ஆவணங்களைக் கோருகிறது. இவை குடியுரிமையைப் பரிசோதிக்கும் ஆவணங்கள். எனவே சிறப்பு தீவிர திருத்தம் என்ற நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். குடியுரிமையைப் பரிசோதிக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிய வருகிறது. இதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவல் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒருபோதும் இடம்பெறாது. இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறவில்லை. அரசின் அனுமதி பெற்றுத்தான் தங்கியிருக்கிறார்கள். ஆகவே, எந்த வகையிலும் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாத சூழல் உள்ளது. இதை உடனடியாக கைவிட வேண்டும்.
அம்பேத்கர் முன்மொழிந்த கோரிக்கையை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். குடியுரிமையைப் பரிசோதிக்கும் முயற்சியாக இதை மேற்கொள்ளக் கூடாது. குடியுரிமையைப் பரிசோதிக்க தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. மின்னணு வாக்கு இயந்திர முறையைக் கைவிட்டுவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும்” என்றார்.
Thirumavalavan has spoken in Parliament calling for the immediate suspension of the SIR that has been requiring documents to verify citizenship.