லட்டு சர்ச்சையை அடுத்து திருப்பதி கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன் பயணத்தை ரத்து செய்துவிட்டு, ஆளும் ஆந்திர அரசைக் கடுமையாக சாடியுள்ளார்.
கடந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின்போது திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றம்சாட்டினார். செய்தியாளர்களைச் சந்தித்து, இந்தக் குற்றச்சாட்டுக்கு நீண்ட விளக்கத்தை அளித்தார் ஜெகன் மோகன் ரெட்டி.
இதைத் தொடர்ந்து இன்று (செப்.27) இரவு திருப்பதியில் தங்கி, நாளை காலை திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்யத் திட்டமிட்டிருந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. ஆனால் இன்று மாலை திருப்பதி பயணம் தொடங்குவதற்கு முன்பு தன் பயணத்தை ரத்து செய்வதாக ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து ஆந்திர அரசுக்கு எதிரான சராமாரியான குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெகன் மோகன் ரெட்டி பேசியவை பின்வருமாறு:
`பேயின் ஆட்சி மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. என் திருப்பதி பயணத்தைத் தடுக்க அரசு முயற்சி செய்கிறது. திருப்பதி பயணத்தை ஒட்டி மாநிலம் முழுவதும் உள்ள எங்கள் கட்சித் தலைவர்களுக்கு காவல்துறையால் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அந்த நோட்டீஸில் திருப்பதி கோயிலுக்குச் செல்ல அனுமதி இல்லை எனவும், எங்கள் கட்சி ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு ஒப்புதல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் லட்டு பிரசாதம் குறித்து அப்பட்டமாக பொய் சொல்கிறார் சந்திரபாபு நாயுடு. அவர் கிளப்பிய லட்டு சர்ச்சை தற்போது என்ன ஆனது? திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் புகழை குறைத்துவிட்டார் சந்திரபாபு நாயுடு. நமது லட்டுகளின் பெருமையைக் குறைந்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.
தான் பொய் கூறுவது தெரிந்துமே, வேண்டுமென்றே லட்டுகள் மீதான சந்தேகத்தை அவர் விதைத்துள்ளார். நான் எந்த மதத்தைப் பின்பற்றுகிறேன் என்று அறிவிக்குமாறு கூறுகின்றனர். என் சாதியைப் பற்றி கேள்வி எழுப்புகின்றனர். நான் என் இல்லத்தில் பைபிளைப் படிப்பேன், ஹிந்து மதம், இஸ்லாமிய மதம், சீக்கிய மதம் ஆகியவற்றை நான் மதிக்கிறேன், பின்பற்றுகிறேன்.
நான் மனித நேயத்தை பின்பற்றுகிறேன். அரசியலமைப்பு சட்டம் என்ன கூறுகிறது? மதச்சார்பின்மையின் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா? முதலமைச்சருக்கு நிகராக உள்ள ஒரு நபர் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை என்றால், தலித்துகள் எவ்வாறு நடத்தப்படுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
உங்களை (பாஜக) ஹிந்து மதத்தின் பிரதிநிதிகளாக கூறுகிறீர்கள். ஆனால் திருப்பதி பாலாஜியின் மாண்பும், லட்டு பிரசாதத்தின் புனிதத் தன்மையும் பொய்யான குற்றச்சாட்டுகளால் சீரழிக்கப்படுவதை ஏன் அனுமதிக்கிறீர்கள்? எதனால் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையையும் நீங்கள் எடுக்கவில்லை? மனிதநேயம் காட்டுவதே ஹிந்து மதமாகும்’ என்றார்.