திருப்பதி லட்டு விவகாரத்தில் கடவுளை அரசியலில் இருந்து தள்ளி வைத்திருக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
கடந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியின்போது, திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குற்றச்சாட்டை எழுப்பினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்மாநில அரசு அமைத்த சிறப்பு விசாரணைக் குழு, விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதற்குப் பதிலளித்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இது அரசியல் ஆதாயத்துக்காக சந்திரபாபு நாயுடு கிளப்பிவிட்ட பொய்யான குற்றச்சாட்டு என்று பதிலளித்தார்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று (செப்.30) நீதிபதி பி.ஆர். கவாய் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின்போது நீதிபதி பி.ஆர். கவாய், `முதல்வர் பதவியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு எதற்காக இந்த விவகாரத்தை பொதுவெளியில் எடுத்துச் சென்றார்? எதனால் ஜூலை மாதம் வெளிவந்த ஆய்வறிக்கை செப்டம்பர் மாதம் ஊடகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது?
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சேர்க்கப்பட்டது தொடர்பான ஆய்வறிக்கையில் தெளிவில்லை. அப்படி இருக்கும்போது குழப்பத்தை ஏற்படுத்தும் விஷயத்தை ஊடகங்களிடம் தெரிவிக்கவேண்டிய அவசியம் என்ன? இந்த விவகாரத்தில் கடவுளை அரசியலில் இருந்து தள்ளி வைத்திருக்கவேண்டும்.
லட்டு தயாரிப்பில் கலப்பட நெய்யை பயன்படுத்தவில்லை என திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதைக் கருத்தில் கொள்ளாமல் எந்த அடிப்படையில் சந்திரபாபு நாயுடு இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்?’ என்று ஆந்திர அரசுக்குக் கேள்விகளை எழுப்பினார்.
ஆந்திர பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சித்தார்த் லூத்ரா ஆகியோர் ஆஜராகி, நீதிபதியின் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.