
அகில இந்திய குடிமைப் பணித் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரை பிப்ரவரி 14 வரை கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.
சட்டவிரோதமான முறையில் ஓபிசி சான்றிதழையும், மாற்றுத்திறனாளி சான்றிதழையும் பெற்று, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளைத் தாண்டி குடிமைப் பணித் தேர்வில் பூஜா கேத்கர் கலந்து கொண்டதை விசாரணை மூலம் உறுதி செய்தது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயமான யுபிஎஸ்சி.
இதைத் தொடர்ந்து, கடந்தாண்டு செப்டம்பரில் ஐஏஎஸ் (பயிற்சி) விதிகள் 1954, விதி எண் 12-ன் கீழ் பூஜாவை ஐஏஎஸ் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் பூஜா. ஆனால் அவருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்த உயர் நீதிமன்றம், `பூஜா மீதான குற்றச்சாட்டு இந்த சமூகத்திற்கும், தேசத்திற்கும், யுபிஎஸ்சிக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட மோசடிக்கான ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு’ எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் பூஜா கேத்கர். அவரது முன் ஜாமின் மனு, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, சதீஷ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு, வரும் பிப்ரவரி 14 வரை பூஜா கேத்கரைக் கைது செய்ய தடை விதித்தனர் நீதிபதிகள்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க மத்திய அரசு மற்றும் யுபிஎஸ்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். பூஜாவின் முன் ஜாமின் மனு தொடர்பான விசாரணை மீண்டும் பிப்ரவரி 14-ல் நடைபெறவுள்ளது.