திருப்பதி கோயிலுக்கு ஒருபோதும் நெய் விநியோகித்தது கிடையாது என அமுல் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டுவைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி நாடு முழுக்கப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருப்பதி கோயிலுக்கு தாங்கள் ஒருபோதும் நெய் விநியோகம் செய்தது கிடையாது என அமுல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் (ஜிசிஎம்எம்எஃப்) நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார். ஜிசிஎம்எம்எஃப் அமைப்பு தான் அமுல் நிறுவனத்தை நடத்தி வருகிறது.
ஜெயன் மேத்தா கூறியதாவது:
"ஆந்திரப் பிரதேசம் திருப்பதி கோயிலில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நிறுவனம்தான் நெய்யை விநியோகிப்பதாக சிலர் தவறான தகவல்களைப் பரப்ப முயற்சிக்கிறார்கள்.
இந்தப் பொய்ப் பிரசாரத்தை நிறுத்த ஆமதாபாத் சைபர்கிரைம் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளோம். திருப்பதி தேவஸ்தானத்துக்கு அமுல் நிறுவனம் ஒருபோதும் நெய் விநியோகம் செய்தது கிடையாது.
அமுல் பொருள்கள் உயர்தரமானவை. பொருள்களின் தரம் மிகக் கடுமையாக சரிபார்க்கப்பட்ட பிறகுதான் பயன்பாட்டு வருகிறது. எனவே, இதுபோன்ற (பொய்ப் பிரசாரம்) தவறான தகவல்களை நம்ப வேண்டாம்" என்றார் அவர்.