
சர்ச்சையில் சிக்கிய மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் சுருக்கம்:
அகில இந்திய குடிமை பணி தேர்வில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளை மீறி சட்டவிரோதமாக பூஜா மனோரமா திலீப் கேத்கர் கலந்து கொண்டது தெரிய வந்ததை அடுத்து, அது குறித்து பதிலளிக்க ஜூலை 25 வரை அவகாசம் அளித்து, கடந்த ஜூலை 18-ல் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
பிறகு அவரின் கோரிக்கையை ஏற்று பதிலளிக்க ஜூலை 30 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரி பார்த்ததைத் தொடர்ந்து 2022 அகில இந்திய குடிமை பணி தேர்வு விதிகளுக்கு முரணாக அவர் நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது. தன் பெயரை மட்டுமல்லாமல், தன் பெற்றோரின் பெயரையும் மாற்றி இந்தத் தேர்வில் சட்டவிரோதமான முறையில் அவர் கலந்துகொண்டுள்ளார்.
இதனால் 2022 அகில இந்திய குடிமை பணி தேர்வில் பூஜா மனோரமா திலீப் கேத்கர் பெற்ற தேர்ச்சி ரத்து செய்யப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் யுபிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் கலந்துகொள்ள பூஜா மனோரமா திலீப் கேத்கருக்கு நிரந்தத் தடைவிதிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கடந்த 2009 முதல் 2023 வரை, அகில இந்திய குடிமை பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற 15,000 தேர்வர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. பூஜா மனோரமா திலீப் கேத்கரைத் தவிர்த்து வேறு எந்தத் தேர்வரும் அகில இந்திய குடிமை பணி தேர்வில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளை மீறிக் கலந்துகொள்ளவில்லை.